
அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போராட்டத்தை தொடங்கினர்.
முன்னாள் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், ஏமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர்.
இதன் காரணமாக அதிபர் மன்சூர் காதி சனாவை விட்டு வெளியேறி ஏடன் நகரில் தஞ்சம் புகுந்தார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து அங்கே முகாமிட்டுள்ள அவர், தனது அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி படையினரை முறியடிக்க உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு நேரடி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஹவுத்தி படையினருக்கு எதிராக சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி களத்தில் இறங்கியது. ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய போர் விமானங்கள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. இதில் கிளர்ச்சியாளர்களின் ஏராளமான போர் விமானங்கள் அழிக்கப்பட்டன.
எனினும், ஹவுத்தி இனப்போராளிகளுக்கும், அதிபரின் ஆதரவுப் படைகள் மற்றும் அரசு ராணுவத்துக்கும் இடையிலான சண்டை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், ஏமன் நாட்டு மையப்பகுதியான டாயேஸ் நகரில் உள்ள அதிபரின் மாளிகையை கைப்பற்ற அதிபரின் ஆதரவு போராளிகளுக்கும், ஹவுத்தி படையினருக்கும் இடையில் நேற்று ஆக்ரோஷப் போர் நடந்தது. இருதரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் அதிபரின் ஆதரவாளர்கள் 15 பேரும், ஹவுத்திப் போராளிகள் தரப்பில் 21 பேரும் பலியாகினர்.
இதற்கிடையில், சுமார் 6 லட்சம் மக்கள் வாழும் டாயேஸ் நகருக்கு வரும் மருத்துவ உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக போர்க் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் ‘எல்லைகள் இல்லாத டாக்டர்கள்’ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நகருக்கு வரும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இங்குள்ள 20 ஆஸ்பத்திரிகளில் ஆறு மட்டுமே இயங்கி வருகின்றன. இதிலும் சில ஆஸ்பத்திரிகள் பகுதிநேரமாக மட்டுமே இயங்குகின்றன என கூறப்படுகிறது.
ஏமனில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 4500 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.