வட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தாக்கிய சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பகுதிகளை சென்றடைய ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் மீட்புக் குழுக்கள் திணறி வருகின்றன.
கடந்த திங்களன்று 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய இந்த நில நடுக்கத்தில் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலேயே பெரும்பாலா னோர் பலியாகியிருப்பதோடு 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
எனினும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த மலைப் பிரதேசத்தில் பாதிப்பு குறித்து இன்னும் உறுதியாகாத நிலையில் அந்த பகுதிக்கு மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சில பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசமாகும். தலிபான் அமைப்பினர் அங்கு உதவிகளை கோரியிருப்பதோடு நிவாரண உதவிகள் திருப்பி அனுப்பப் படமாட்டாது என்று உறுதி அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி தலிபான் போராளிகளுக்கு உத்தரவி டப்பட்டதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.