25.10.2015 அன்று மாலை லண்டன் “hayes” ல் அரசியற்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்து புற்றுநோயால் சாவடைந்த தமிழினி (ஜெயக்குமாரன் சிவகாமி) அவர்களதும், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து மீண்டு வந்து சிறைகளிலும், வதை முகாங்களிலும் அடைக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்து, விடுதலையாகி, தமது குடும்பங்களுடன் இணைந்து அமைதி வாழ்வில் ஈடுபட்டு பின்பு நோயினாலும், விபத்தினாலும், மன அழுத்தினாலும் சாவடைந்த முன்னாள் பெண்போராளிகளினதும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழினியோடு தமிழேந்தி (பாலசூரியன் வாரணி), யோகலட்சுமி (தேவகி கணேசதாஸ்), அவருடைய கணவர் நவம் (கந்தசாமி கணேசதாஸ்),சோலைத்தமிழ் (கேசவராசா ரகுரஞ்சினி), இசையரசி (சசிதரன் தாரிசா), பாடினி,கேமா மற்றும் அறிவுமங்கை (சிவேந்திரன் கார்த்திகா) ஆகிய போராளிகளும் நினைவுகூறப்பட்டனர். பொதுச்சுடரினை அறிவுமங்கையின் தாயாரும், கணவரும் ஏற்றிவைக்க, தேசியக்கொடியினை திருமதி.ஆதவன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு, ஈகைச்சுடரேற்றலும் அகவணக்கமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து கலைமகளின் சிறப்புக்கவிதையான “போரடித்த கருவியல்ல விடுதலைகாய்ப் போராடிய கருவி நீ” திரையிடப்பட்டது. அத்துடன் நினைவுரையும் ஆற்றப்பட்டது.