நிலைமை இன்னமும் பலவீனம்: கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவு உடனடியாக இல்லை என்கிறது பிரான்ஸ்!

0
200

பிரான்ஸில் தற்சமயம் அமுலில் இருக்கும் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றியோ அன்றிப் புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்தோ உடனடியாக முடிவு எதுவும் எடுக்கப்பட மாட்டாது.

அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால்
(Gabriel Attal) இன்று புதன்கிழமை நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் முடிவில் செய்தி யாளர்ளிடம் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டில் வைரஸ் தொற்று சீராக ஆனால் உயர்ந்த எண்ணிக்கையில் இருந்து வருகிறது. புதிய வைரஸ்கள் காரணமாக நிலைமை இப்போதும் பலவீனமாகவே நீடிக்கிறது. மருத்துவமனைகள் மீதான அழுத்தங்கள் குறையவில்லை.”

” எதிர்பாராத வகையில் வைரஸின் திரிபடைந்த புதிய தொற்றுக்களை எதிர்கொண்டிருக்கிறோம்.அதனால் உணவகங்கள், கலாசார மையங்கள் போன்றவற்றை மீளத் திறக்கின்ற முக்கிய தீர்மானம் எதனையும் எடுக்கக் கூடிய நிலைமை இன்னமும் உருவாக வில்லை.”

-இவ்வாறு அரசாங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிலைவரம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள வாராந்த செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சர் மேலும் விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய தீர்மானங்கள் எதனையும் எடுக்காமல் தற்போதைய குளிர்காலப் பள்ளி விடுமுறை நாட்கள் முடிவடையும் வரை நிலைமையைப் பொறுத்திருந்து பார்க்க அரச உயர்மட்டம் விரும்புகிறது எனத் தெரியவருவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சமயத்தில் புதிதாக சுகாதார விதிமுறைகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படமாட்டாது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை-

தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகின்ற சுகாதார அறிவியலாளர் குழுவுக்கு (Scientific Council) புதிதாக மேலும் நால்வரை அரசு நியமித்திருக்கிறது.

*தொற்று நோயியல் நிபுணர் Catherine Chirouze-
*குழந்தை மனநல மருத்துவ நிபுணர் Angele Consoli-
*முதுமை நோய் நிபுணர் Olivier Guérin-
*கால்நடைத் தொற்றுநோயியல் நிபுணர் Thierry Lefrançois- ஆகிய நால்வருமே புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர் என்று அரச வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

(படம் :கப்றியல் அட்டால். நன்றி :France Blue)

குமாரதாஸன். பாரிஸ்.
17-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here