10-ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம் இன்று சுவிசு நாட்டிற்குள் நுழைகின்றது!

0
359

« இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க எம் தமிழ் மக்களினால் தமிழீழ மீட்புக்காக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை காலத்தின் தேவைக்கேற்ப வடிவங்கள் மாற்றம் பெற்று இலட்சியத்தில் உறுதியாகப் பயணிக்கின்றது. அந்த வகையிலே 22ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று 17.02.2021 Sélestat,Colmar மற்றும் Mulhouse மாநகரசபையில் எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டு மனுக்களும் கையளிக்கப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக தமிழீழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அடக்குமுறை மற்றும் மாற்றுவடிவம் பெற்ற இனவழிப்புக்கள் தொடரும் வண்ணம் மேலும் சிங்களப் பேரினவாத அரசிற்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது எனவும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை மாநகரசபை முதல்வர்கள் வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஊடாக அரச அதிபருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இதுவரை காலமும் விடாமுயற்சியோடு விடுதலைக்காக பல களங்களில் போராடி இன்று வரையிலும் நம்பிக்கை உறுதியோடு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

பல ஐரோப்பிய நாடுகளையும் முக்கிய அரசியல் மையங்களையும் ஊடறுத்து இன்று 18.02.2021 அன்று பி.ப 14.30 மணியளவில் Switzerland நாட்டினுள் Basel மாநகரின் எல்லை ஊடாக மனித நேய ஈருருளிப்பயணம் நுழைகின்றது. மற்றும் 22.02.2021 ஐ.நா முன்றலினை வந்தடைந்து தொடர் அடையாள உண்ணா நோன்பும் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 01.03.2021 அன்று ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் பெரும் கவனயீர்ப்பு போராட்டமும் மக்கள் எழுச்சியுடன் கொடிய நோய்த்தொற்றின் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளோடு நடைபெற இருக்கின்றது.

எமது அன்பான உறவுகளே, எதிர்வரும் 46 ஆவது மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் பட்சத்தில் நாம் வாழும் நாடுகளினை எமது நியாயமான கோரிக்கையினை செவிமடுக்க வைப்பது காலத்தின் வரலாற்றுத் தேவை. அதுமட்டுமன்றி தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் மூலம் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமது இலக்கான தமிழீழ மண்ணை மீட்க குறுகிய காலப்பகுதியாக இருந்தாலும் சோர்வுறாத உறுதியோடு மாவீரர்கள் என்றும் துணை நிற்க தொடர்ந்து போராடுவோம் என உறுதி கொள்வோம்.

மக்கட் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழீழம் மலரட்டும்

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here