பிரான்சில் 300 பேர் இரகசியமாகக் கூடி இரவு விருந்து: காவல்துறையுடன் மோதல்; இருவர் கைது!

0
440

பிரான்சில் 300 பேர் இரகசியமாகக் கூடிய இரவு விருந்து மதுபோதையில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து
ஏற்பாட்டாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு அனுப்பி மிகவும் ரகசியமான முறையில் 300க்கு மேற்பட்டோரை ஒன்று திரட்டி பெருமெடுப்பில் இரவு நடன விருந்துக் கொண்டாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது

அதுபற்றிய தகவல் அறிந்து நள்ளிரவில் அங்கு விரைந்த பொலீஸாருடன் நிறை போதையில் களியாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இரவுக் களியாட்டத்தை தடையை மீறி நடத்த அனுமதித்த பவியன் வீடு ஒன்றின் பாதுகாவலர் மற்றும் ஏற்பாட்டாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.வீட்டின் உரிமையாளர் பின்னர் பொலீஸில் சரணடைந்துள்ளார்.

பாரிஸ் வல்-து-மான் மாவட்டத்தில் ஜொன்வீல்-லூ-புவான் (Joinville-le-Pont – Val-de-Marne) நகரத்தில் வெள்ளி இரவு நடந்த இந்தக் குடி கும்மாளக் களியாட்ட விருந்து அப்பிரதேச மக்களையும் அதிகாரிகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இரகசியமாக வந்து பங்குபற்றிய சுமார் 300 பேரில் ஒருவர் வைரஸ் தொற்றாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒரு பெரும் கொத்தணியாக பலருக்கு வைரஸ் பரவும் ஆபத்து உருவாகி உள்ளது. இதனை அடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சோதனை முடிவுகள் வரும்வரை சகலரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பொலீஸ் நிர்வாகம் கேட்டிருக்கிறது.

இரவுக் களியாட்டத்துக்காக பெரிய பவியன் வீடு ஒன்றின் மேற்தளப் பகுதி மது அருந்தகம் (Bar) சக்தி வாய்ந்த ஒலி, ஒளி அமைப்பு போன்றவற்றுடன் கூடிய இரவு விடுதிபோன்று மாற்றியமைக்கப்பட்டுத் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 2மணியளவில் ஓசை கேட்டு விழித்த அயலவர்கள் பொலீஸாருக்கு அவசர அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
பொலீஸ் அணி ஒன்று அங்கு விரைந்து சென்றதும் களியாட்டக் காரர்கள் திரண்டு அவர்களை மதுப் போத்தல்களால் கண்டபடி தாக்கியுள்ளனர். நீண்ட நேரம் நீடித்த வன்முறைக்குப் பிறகு பொலீஸார் கலகம் அடக்கும் ஆயுதங்களைப் பிரயோகித்து நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தற்போது அமுலில் இருக்கும் சுகாதார விதிமுறைகளை மீறி ஆட்களைத் திரட்டி களியாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் அதற்கு இடவசதி வழங்கியவர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.

15-11-2020. – ஞாயிற்றுக்கிழமை. குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here