இஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள்!

0
796

ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டின், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உட்பட உலகின் 40 நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேமில் உள்ள கொலோகோஸ்ட் நினைவாலையத்தில் கடந்த 23 ஆம் நாள் கூடியிருந்தனர்.

இரண்டாம் உலகப்போரின்போது யூத இனத்திற்கு எதிராக ஜேர்மனியின் நாசிப் படையினர் மேற்கொண்ட இனஅழிப்பின் போது அவர்கள் பயன்படுத்திய செறிவாக்கப்பட்ட முகாம்களில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டதன் 75 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டே அவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

இந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் இற்கு மேற்பட்ட யூத இன மக்கள் காணாமல் போயிருந்தனர் அல்லது கொல்லப்பட்டிருந்தனர். அவர்களை நினைவுகூரும் முகமாக 1953 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவாலயத்தில் மில்லியனுக்கு மேற்பட்ட ஆவணங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அங்கு 170,000 நூல்களும் உள்ளன.

இந்த நினைவிடத்திற்கு ஆண்டு தோறும் உலகம் எங்கும் இருந்து ஒரு மில்லியன் மக்கள் வந்து செல்வதுண்டு. இன்றுவரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 6 மில்லியன் மக்களில் 4.8 மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் ஆய்வு மையத்தின் வரலாற்றுத்துறை ஆய்வாளர் கலாநிதி றொபேட் றொசெற்.

ஆனால் இன அழிப்பில் இருந்து தப்பிய யூதஇனம் இன்று பலஸ்தீனம் மீது ஒரு இனஅழிப்பை முன்னெடுத்து வருவதுடன், இனஅழிப்பில் ஈடுபடும் ஏனைய நாடுகளுக்கும் முன் ஊதாரணமாகத் திகழ்ந்து வருகின்றது.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இன அழிப்புக்கு ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது இஸ்ரேல். தற்போது தமிழ் மக்கள் மீதான முகநூலின் தொழில்நுட்ப வன்முறையும் பலஸ்த்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் முன்னர் மேற்கொண்ட உத்தியை பின்பற்றியே இடம்பெற்றுவருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப்பேர் தொடர்பான ஆவணங்கள், விடுதலைப்புலிகளின் போரியல் ஆவணங்கள், சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் என பல தரப்பு மக்களாலும் முகநூலில் பதிவிடப்பட்ட பெருமளவான ஆவணங்களை முகநூல் நிறுவனம் அழித்து வருவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

விடுதலைப்புலிகளின் தலைவரின் படங்களை பதிவிட்டனர் என்ற காரணங்களை முன்வைத்து பொருமளவான தமிழ் மக்களின் முகநூல் கணக்கை முடக்கிய முகநூல் நிறுவனம் அவர்களின் ஆவணங்களையும் அழித்துள்ளது.

தன்னால் பதிவிடப்பட்ட பெருமளவான வரலாற்று ஆவணங்களை தான் இழந்துள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளார் தமிழ் அரசியல் ஆய்வாளர் ஒருவர்.

அதாவது 2016 ஆம் ஆண்டு இஸ்ரேலின் ஆலோசனையின் பேரில் முகநூல் மற்றும் ருவிட்டர் ஆகிய நிறுவனங்கள் பலஸ்தீனம் தொடர்பில் அந்த மக்களால் பதிவிடப்பட்ட பல ஆயிரம் ஆவணங்களை அழித்திருந்தது.

வன்முறைகளை தூண்டுகிறார்கள் என்ற போர்வையில் மேற்கொண்ட இந்த இலத்திரனியல் இனஅழிப்பில் பலஸ்தீன விடுதலைப்போர் தொடர்பில் பதிவிடப்பட்ட பெருமளவான ஆவணங்கள், தகவல்கள், இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் என்பன அழிப்பட்டதாகவும் இது இஸ்ரேலின் நீதி அமைச்சர் அயிலெற் சகேட் இன் நேரடி உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டதாக கேட்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது. Justice Minister Ayelet Shaked

ஆனால் தற்போது இதே வழிமுறையை இந்திய – சிறீலங்கா அரசுகள் முகநூல் நிறுவனத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றன.

ஒருபுறம் தமிழ் மக்களின் விடுதலைப்போர் தொடர்பான ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள
இந்தியா தற்போது சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களின் இருப்பையும் கேள்விக்குறியாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தமிழர் ஆய்வுகூடம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் உள்ள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபலசேன அமைப்புடன் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இணந்து அதன் பயிற்சி மையங்களை 17 மாவட்டங்களில் அமைத்துள்ளதாகவும். இது தமிழர்களுக்கு எதிராக இயங்கவுள்ளதாகவும் ஆய்வுகூடம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் இனத்திற்கு எதிராக சிறீலங்காஅரசு இந்திய மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் இனஅழிப்பில் பல இடங்களில் இஸ்ரேலின் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. தாயகத்தில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளும் இஸ்ரேலிய பாணியில் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் தாயகத்தை தளமாகக் கொண்ட அரசியல்வாதி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இத்தகைய இன அழிப்புக்களில் இருந்து தமிழினம் தன்னை எவ்வாறு காத்துக்கொள்ளப்போகின்றது தொடர்பில் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். எமது ஆவணங்களை காப்பதற்கு ஆவணக்காப்பகங்களை அமைப்பதுடன், தமிழ்த் தேசிய ஊடகங்களைப் பலப்படுத்தி அதன் மூலம் எமது இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கான தயார்ப்படுத்தல்களை நாம் மேற்கொள்வதுடன், வர்த்தக மற்றும் பிராந்திய நலன்சார் சமூகவலைத் தளங்களில் இருந்து எமது இன அடையாளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here