பிரான்சில் முள்ளிவாய்க்கால் அவலத்தை கண்முன் கொண்டுவந்த இளையோர்கள்!

0
20

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு அரசியல் பிரிவு இளையோர், தமிழ் இளையோர் அமைப்பினருடன் இணைந்து மே 18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டினை முன்னிட்டு “தமிழின அழிப்பின் தடயங்கள்
காட்சிப்படுத்தல்” என்னும் தொனிப் பொருளில் முள்ளிவாய்க்கால் அவலங்களை கண்முன் நிறுத்தியிருந்தனர்.

இன்று– 17 மே 2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாரிஸ் நகரில் ( 76, rue saint maur 75011 Paris) குறித்த காட்சிப்படுத்தல் ஆரம்பமாகி இருந்தது.


சிறீலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னான, ஈழத் தமிழர் வரலாற்றை, மீண்டும் வாழ்ந்து பார்க்கும், தனித்துவமான-பன்முக உணர்வு அனுபவ காட்சிப்படுத்தல் ஒன்றை, உங்கள் முன்னிலையில் கொண்டு வருகின்றோம் என சொல்லுக்கு CCTF • TYO France இளையோர் செயல் வடிவம் கொடுத்துள்ளனர்.

அரிதான ஆவணங்கள், புகைப்படங்கள் காணொளிகள் என அனைத்தையும் நவீன வடிவமைப்பில் சிந்தித்து செயற்படுத்தி யுள்ளார்.

இந்த முக்கியமான வரலாற்றை கண்டு அறிந்து, புரிந்து கொள்வதற்கு இளையோர்கள் கை குறிப்பிட்டு அழைத்தது மட்டுமில்லாமல் சமூக இணையங்களின் ஊடாக பதிவுகளை மேற்கொண்டு வரையறை செய்து. 12 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் 15 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

மங்கலான ஒளி சூழ்ந்த அறையொன்றில் முள்ளிவாய்க்கால் கடற்கரை மணல் போன்ற மாதிரியை உருவாக்கி அங்கே சிதைக்கப்பட்ட மனித உடல்களின் பாகங்களையும் உடைகளையும் இதர பொருட்களையும் வடிவமைத்து உள்நுழையும்போதே காலில் மிதிவெடிகள் வெடிப்பது போன்று சிறிய செடிகளையும் பரவியிருந்த ரன். இவ்வாறான சூழலில் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் ஒலி ஒளி வடிவில் சமநேரத்தில் ஒளிபரப்பிய போது, முள்ளிவாய்க்கால் அவங்களுக்கு மத்தியில் நாம் நிற்பது போன்ற வலி உணர்வை எமக்கு ஏற்படுத்தியது.

இதனை உணர்ந்த போது எம்மை அறியாமலே கண்கள் குளமாகின. சிலர் மயங்கி விழும் நிலைக்கே தள்ளப்பட்டனர்.

சிறுவர்கள், இதயம் பலவீனமானவர்கள் முற்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கனத்த மனத்தோடு வெளியே வந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கட்சியின் மகத்துவம் பற்றிக் கூறி முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சிரட்டையில் பரிமாறப்பட்டது.

தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் பிரெஞ்சு மக்களும் கலந்துகொண்டு குறித்த முள்ளிவாய்க்கால் பேரவலங்களை அனுபவித்து உணர்ந்து கொண்டதுடன் மட்டும் நிற்காமல் முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் சிரட்டை யில் அருந்திய படி தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு நாளைய மே 18 நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்வோம் என உறுதியோடு கூறி விடைபெற்றனர்.

குறித்த இளையோர்களின் இந்த முயற்சி 16 ஆண்டுகள் கடந்தும் எமது மக்களின் அவலங்களுக்கு நீதி எட்டும் வரை எம் சந்ததி தூங்காது என்பதற்கு சான்று பகர்கிறது.

(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு ஊடகப் பிரிவு)

CCTF – TYO France

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here