தமிழரின் வாக்குகளை கோருபவர்கள் தாங்கள் விட்ட தவறுகளை ஏற்று முதலில் மன்னிப்புக் கேட்கவேண்டும்!

0
21

1987 – 1989 காலத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களுக்கும், 1987 ஜே.ஆர்-ராஜிவ் ஒப்பந்தம் வழிவகுத்த வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் ஊடாக ரத்தாக்கியதற்கும் இதுவரை ஜே.வி.பி. ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. தமிழரின் மறதியைச்  சாதகமாக்கி வாக்குகளைச் சுருட்ட முனைவது ஏற்புடையதன்று. மன்னிப்பைக் கேட்டுவிட்டு வாக்குகளைக் கேட்க வேண்டும். அதுவே ஜனநாயகம்.

இந்த வருடம் கட்டாயமாக நடந்தேற வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவாறு நடைபெறுமா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இரண்டு தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற வேண்டுமென்ற கோரிக்கை ஷமுசுப்பாத்தி நாடகம்| போல அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

எக்காரணம் கொண்டாவது ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் ரணிலின் பலம் ஓங்கி விடும். அதன் பின்னர் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அணியே வெற்றி பெற்றுவிடும் என்ற பீதியே மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாச அணிகளிடம் காணப்படுகிறது. 

இதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமெனக் கேட்கிறார்கள். இது புரியாதவரல்ல ரணில். உலகத்திடம் பெற்ற கடனை தொடர்வதற்கான இரண்டாம் கட்டம் யூலை மாதத்தில் வருவதால் அதற்கு முன்னர் எந்தத் தேர்தலையும் நடத்துவது சாத்தியப்படாது என்று அவர் அறிவித்துவிட்டார். 

அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலுடன் ஒரேநாளில் இரண்டு தேர்தல்களையும்;  நடத்தலாம்தானே – அதாவது ஜனாதிபதித் தேர்தலன்று நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த முடியும் என்பதாக எதிரணிகளின் கோரிக்கை வந்தது. இது சிறுவயதில் விளையாடிய நொடியை அவிழ்ப்பதற்கு மாற்றுநொடி போடுவது போன்றது. 

இந்த விளையாட்டுக்கு ரணில் தயாரில்லை. தேர்தல் ஆணையாளர் இவ்விடயத்தில் ரணிலின் பக்கம். இரண்டு தேர்தல்களையும் இந்த வருடத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளோம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் சொன்னாரே தவிர, இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியுமென்று அவர் தெரிவிக்கவில்லை. 

இப்போது ஒரு விடயம் நிச்சயமாகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலை நடத்த மட்டுமே தேர்தல் ஆணையகம் தன்னைத் தயார்படுத்தி வைத்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளைப் பார்க்கையில் மூன்று வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதும் ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. ரணில், சஜித், அனுரகுமார ஆகியோரே இம்மூவரும். இதற்காக புதிய கூட்டணிகள் உருவாகியுள்ளன. உருவாகியும் வருகின்றன.

சஜித் பிரேமதாச அணியுடன் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அளகப்பெரும ஆகியோர் தலைமையிலான சுதந்திர மக்கள் அணி இணைந்துள்ளது. இது ஆறு உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் அனைவருமே மகிந்தவின் பொதுஜன பெரமுனவுடன் இருந்தவர்கள். 

ஜி.எல்.பீரிஸ் மெத்தப் படித்த கல்விமான். பேராசிரியரும்கூட. அனேகமாக எல்லாச் சிங்கள கட்சிகளுடனும் சேர்ந்து, பின்னர் பாய்ந்து பாய்ந்து பிரிந்தவர். தேர்தல்களில் போட்டியிடுவது இவருக்கு ஒவ்வாமை. தேசியப்பட்டியல் எம்.பியாகி அமைச்சர் கதிரையில் ஏறி அனுபவப்பட்டவர். தேர்தலில் நம்பிக்கையில்லாத இவர் அரச பதவிகளில் மோகம் உள்ளவர். இப்போது சஜித் பிரேமதாச அணியுடன் சேர்ந்துள்ளார். சஜித்தின் அணி ஆமை புகுந்த வீடாகப் போகிறது என்கிறார்கள் கட்சிப் பிரமுகர்கள் சிலர்.

ரணில் இன்னமும் தனது கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அநேகமாக அனைத்துக் கட்சிகளிலிருந்தும் இழுத்தெடுக்கப்படுபவர்களின் ஷமெகாகூட்டணி|யாக இது அமையுமென்று சகல கட்சிகளும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. அதனால் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி விடவேண்டுமென்ற முனைப்பில் – ரணில் இறுதி நேரத்தில் போட்டியிலிருந்து விலகி விடுவாரென்று ஒரு தகவலை ரொக்கட் வேகத்தில் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் பரப்பி வருகின்றனர். 

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றிபெற மாட்டேனென்று ரணில் கருதுவாரானால் தமக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி எவ்வகையிலாவது தேர்தலைப் பின்போட அவர் முயற்சிப்பாரேயன்றி, போட்டியிடாது தவிர்த்துக் கொள்வாரென எதிர்பார்ப்பது மடைமை. 

முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறீசேன போன்றவர்களை பொதுவேட்பாளர்களாக ரணில் நிறுத்தியிருந்தார். இன்றைய அரசியல் காலநிலை இப்போது மாற்றம் பெற்று அவர் பக்கம் காற்று வீசுவதாக உணரப்படுகிறது. 

ஜனாதிபதித் தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக இப்போது ஜொலிப்பவர் அனுர குமார திசநாயக்க. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் விஜயம் மேற்கொண்டு பல தலைவர்களைச் சந்தித்த இவர் ஆஸ்திரேலியா, கனடா நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய முதலாமவர். ரணிலோ சஜித்தோ இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொள்வர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. 

பொதுவாக ஜே.வி.பி. என அழைக்கப்படும் கட்சியின் தலைவர் இவர். 1965ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி றோகண விஜேவீரவினால் ஜே.வி.பி. ஆரம்பிக்கப்பட்டது. எனினும், 1971 ஏப்ரல் 5ம் திகதிய (இந்த மாதத்துடன் 53 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது) சேகுவரா புரட்சி என்ற பெயரிலான ஆட்சிகவிழ்ப்பு முயற்சியின் மூலமே இது சர்வதேச பிரசித்தமானது. அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவை உயிருடன் பிடிக்கும் திட்டத்துடன் ஆரம்பமான இந்தப் புரட்சியை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது ஆயுதப்படையின் பலத்தினால் முறியடித்தார். 

விசேட குற்றவியல் விசாரணை மன்று றோகண விஜேவீரவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுட்சிறை தீர்ப்பு வழங்கியது. 1977ல் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவர்களை விடுதலை செய்து தேசிய அரசியலில் ஈடுபட அனுமதித்தார். 1982ல் இடம்பெற்ற 

ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொபேகடுவ இரண்டாம் இடத்துக்கு வர, றோகண வீஜேவீர மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்ற றோகண விஜேவீர கண்டியிலுள்ள உலப்பன என்ற இடத்திலுள்ள பெருந்தோட்டத்தில் அத்தநாயக்க என்ற மறுபெயரில்; இருந்தபொழுது, 1989 நவம்பர் 12ம் திகதி பிடிபட்டார். கொழும்புக்கு இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்ட இவர் மறுநாள் 13ம் திகதி கொல்லப்பட்டார். கொலைக்கான பின்னணியாக மூன்று சம்பவங்கள் சொல்லப்பட்டன. ஆனால் ஒன்றுகூட நிரூபிக்கப்படவில்லை. இது தொடர்பான பகிரங்க விசாரணையும் இடம்பெறவில்லை. 

சஜித் பிரேமதாசவின் தந்தையான ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோதே றோகண விஜேவீரவின் கொலை இடம்பெற்றது. 1965ல் ஜே.வி.பி. ஆரம்பிக்கப்பட்ட மூன்று வருடங்களின் பின்னரே, 1968 நவம்பரில் இன்றைய அதன் தலைவர் அனுர குமார திசநாயக்க பிறந்தார். 1971ல் சேகுவேர புரட்சி இடம்பெற்றபோது அனுர குமார திசநாயக்கவுக்கு மூன்று வயது. 

2014 பெப்ரவரி 2ம் திகதி ஜே.வி.பியின் தலைவரான அனுர குமார திசநாயக்க கடந்த பத்தாண்டுகளில் ஒரு தடவைகூட றோகண விஜேவீரவின் கொலைக்கு நீதிவிசாரணை கோரவில்லை. 1987ல் இடம்பெற்ற இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே.வி.பி. இந்தியப் பொருட்களை தென்னிலங்கையில் விற்பனை செய்த (கற்பூரம், குங்குமம், சந்தனம் உட்பட) வணிக நிலையங்களையும், இந்தியத் திரைப்படங்களை இறக்குமதி செய்த தமிழரின் படமாளிகைகளையும் தாக்கி, எரித்து நிர்மூலமாக்கினர். பல தமிழர் காயமடைந்தனர். சிலர் மரணித்ததும் உண்டு. 

1987ம் ஆண்டிலேயே ஓர் இளைஞனாக ஜே.வி.பியில் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் அனுர குமார திசநாயக்க. அதன் பின்னரே பல்கலைக்கழகம் சென்று விஞ்ஞானப் பட்டதாரியானவர். இன்று அதன் தலைவர். ஜனாதிபதி வேட்பாளர். ஜே.வி.பி. அவ்வப்போது தேவை கருதி வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்துள்ளது. 1987ல் ஜே.ஆர்-ராஜிவ் ஒப்பந்தத்தை எதிர்த்தபோது தேசப்பிரிய ஜனதா வியாபாரய (Pநழிடநள Pயவசழைவiஉ குசழவெ) என அழைத்தது. இன்று 

ஜனாதிபதித் தேர்தலுக்குப் போட்டியிடும்போது தேசிய மக்கள் சக்தி (யேவழையெட Pநழிடநள Pழறநச) என நாமம் பூண்டுள்ளது. என்னதான் கோப்பையை மாற்றினாலும் உள்ளிருக்கும் பானம் ஒன்றுதான். 

தமிழர் பிரச்சனையை கடந்தாண்டு பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் தீர்த்து வைப்பேன் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கதிரையை இறுகப் பற்றிய பின்னர் அதனை மறந்துவிட்டார். தேர்தல் பரப்புரைக்காக தமிழர் தாயகம் செல்லும் அனுர குமார வடக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்புவதாக தமிழ்; தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்ற இவருக்கு இந்திய அரசியல் நடைமுறை வகுப்பை தமிழரசு எம்.பி. சுமந்திரன் நடத்தியுள்ளார். 

தமிழ் மக்கள் பிரச்சனையை வெறுமனே வடமாகாண தமிழர் பிரச்சனையாக உருவம் கொடுத்து வடக்கின் பிரச்சனை என்று சொல்லி வருபவர் ரணில். அவரது பாதையில் வடக்கு மக்களின் பிரச்சனையை தீர்க்கப் போவதாக அழைப்பு விடுத்தூள்ளார் அனுர குமார. சிங்களத் தலைவர்களிடம் கட்சி மோதல்கள் இருந்தாலும் தமிழர் மீதான பார்வையில் இந்த ஒற்றுமை எப்போதும் உண்டு. 

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13வது திருத்தம் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபைக்கு வழிவகுத்தது. கிழக்கில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இதனை நிரந்தரமாக்குவதா இல்லையா என்பது முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதலாவது தேர்தலுக்குப் பிறகு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் இடம்பெறவில்லை. சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. 

இன்று தமிழர் பிரச்சனை பற்றி குரல் கொடுக்கும் ஜே.வி.பி. தரப்பினர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்து அதன் இணைப்பை நீதிமன்றத் தீர்ப்பினூடாக ரத்துச் செய்வித்தனர். 

கனடாவில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அனுர குமாரவின் சிங்கள உரையை புரிந்து கொள்ளாத தமிழர் ஒருவர் மொழிபெயர்ப்புக் கேட்டபோது, மேடையிலிருந்த பிரமுகர் ஒருவர் எலியட்ட தாண்ட (வெளியே போ) என்று குரல் கொடுத்தது அனுர குமாரவுக்கு தெரியாததல்ல. நல்லவேளை மொழிபெயர்ப்புக் கேட்ட தமிழருக்கு சிங்களம் புரியாததால் பிரச்சனையின்றி கூட்டம் தொடர்ந்தது. 

1987 – 1989 காலத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்ட வன்செயல்களுக்கும், 1987 ஜே.ஆர்.-ராஜிவ் ஒப்பந்தம் வழிவகுத்த வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் ஊடாக ரத்தாக்கியதற்கும் இதுவரை ஜே.வி.பி. ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. 

ஜனாதிபதி தேர்தலை சந்திக்கும் வேளையில் தமிழரின் வாக்குகளுக்கு கோரிக்கை விடும்போது முதலில் தங்களின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியது கட்டாயமான கட்டாயம். தமிழர்களின் மறதியை சாதகமாக்கி வாக்குகளைச் சுருட்ட முனைவது ஏற்புடையதன்று. மன்னிப்பைக் கேட்டுவிட்டு வாக்குகளைக் கேட்க வேண்டும். அதன் பின்னர் தமிழர் சுயாதீனமாக தங்கள் முடிவை எடுக்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here