“சிறையில் பரீட்சை எழுதிய மகன் எங்கே ?” – 17 வருடமாக மகனை தேடி அலையும் தந்தை கேள்வி!

0
107

கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்து காணாமல் ஆக்கப்பட்ட மகன் , 2007ஆம் ஆண்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அமைச்சர்கள் சந்தித்த போது , எடுத்த புகைப்படத்தில் காணப்படுகிறார். ஆனாலும் இன்று 17 வருடங்கள் கடந்தும் மகனின் நிலைமை தொடர்பில் எந்த தகவலும் இல்லை. நான் இறப்பதற்கு முன்னர் எனது மகனை மீட்டு தாருங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவரின் தந்தையான யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த  2006ம் ஆண்டு 10ம் மாதம் 25ம் திகதி நல்லூர் அரசடி இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினால் எனது மகன் அருணகிரிநாதன் சுதன் பிடித்து செல்லப்பட்டார். அதன் பின்னர் சில காலம் எனது மகனை இராணுத்தினர் வைத்திருந்ததை எமது உறவினர்கள் நண்பர்கள் பலரும் கண்டு எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

குறித்த விடயத்தை பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியபோதும் அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசிய போது 48 பேர் கொண்ட கைதிப்பட்டியலில் தனது மகனும் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் மகனின் விடுதலையை கோரிய போதும் அது சாத்தியப்படவில்லை.

“நாங்கள் நிரபராதிகள் விடுதலைக்கு உதவுங்கள் – பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் அமைச்சர்களிடம் வேண்டுகோள்” எனும் தலைப்பில் 2007 செப்டம்பர் 8ம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் எனது மகனும் சிறைக்குள் இருப்பது தெரிய வந்தது.

மேலும் தினக்குரலில் வெளியான செய்தியின் படி அப்போது இருந்த, அமைச்சர் ராஜித சேனராத்ன பிரதி அமைச்சர்களான பி.ராதாகிருஸ்ணன், கே.ஏ.பாயிஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், உள்ளிட்ட பலரும் பூசா முகாமில் கைதிகளை பார்வையிட்டனர் என்றுள்ளது.

இது தொடர்பில் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்கள்  உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதும் கைதிகள் தொடர்பாக மேலுமொரு இணைய ஊடகமொன்றில் வெளியான புகைப்படத்தில் எனது மகன் இருப்பதும் அறியவந்தது. 

இவ்வாறு எனது மகன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776323036 என்ற இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.

எனது மகன் பற்றிய விடயங்களை காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் என இதுவரை பல இடங்களுக்கு சென்ற போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.

அண்மையில் காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம் குறிப்பிட்ட சிலரை கண்டுபிடித்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here