தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் என்கிறார் :சொல்ஹெய்ம்!

0
197

timthumbஇலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.

மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட ‘சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி’ என்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவராகப் பலவருடங்கள் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்கிசனும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம்,

இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றபோதிலும், ஈழத்தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே வாக்களித்திருந்தனர் என்றும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here