போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சி சொற்பம்.அதனால் தான் திருச்சபை, நிறுவனங்கள் என்பன சிலசில உதவிகளை வழங்க முன்வருகின்றது. இலங்கை அரசு பொறுப்பெடுத்து கூடியளவான உதவிகளை விதவைகளுக்குச் செய்ய முன்வரவேண்டும் என யாழ்.ஆயர் எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருள் கேசப், மற்றும் வோசிங்டன் பெண்கள் விவகார பொறுப்பதிகாரி கத்தரின் ருசல் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போது அமெரிக்க தூதுவர் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு இலங்கை அரசால் முழுமையான உதவிகள் வழங்கப்படுகின்றனவா?என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 25ஆண்டுகளாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் மீளக்குடியேற வேண்டும் மற்றும் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் இவை முக்கியமான தமிழர்களின் பிரச்சினையாக இருக்கிறது என்றார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் என்னவிதமாக முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என்று தூதுவர்கள் யாழ்.ஆயரிடம் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஆயர் இளைஞர்களுக்கு போதியளவு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் வேலையோடு வாழ்க்கையை சந்தோசமாக கழிப்பார்கள்.அதுமட்டுமல்ல போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் ஒரே வழி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று யாழ்.ஆயர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.