பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனை, தமிழ்பெண்கள் அமைப்பு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி , தமிழீழ மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் மாவீரர் தமிழினி, மாவீரர் லெப்ரினன்ட் கேணல் விக்ரர், மாவீரர் லெப்.கேணல் குமரப்பா, மாவீரர் லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்கள், முன்னாள் மருத்துவப்போராளி மாவீரர் சசிதரன் தாரிகா ஆகிய மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு சார்சல் நகரத்தில் 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மிகவும் எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.
மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றல், மலர் வணக்கம், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள், சிறப்புப் பேச்சுக்கள் என்பன சிறப்பாக அமைந்திருந்தன.
மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை, 17.09.2007 அன்று பருத்தித்துறை பகுதியில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் தமிழ் முதல்வன் அவர்களின் தாயாரும்,
தமிழீழ மகளிர் அரசியல்துறைப்பொறுப்பாளர் மாவீரர் தமிழினி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1992 இல் நரிவில்லிக்குளத்தில் வீரச்சாவடைந்த மேஜர் சஜந்தன் அவர்களின் சகோதரியும்,
மாவீரர் லெப்ரினன்ட் கேணல் விக்ரர் அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 12.03.2003 அன்று மடுப்பகுதியில்; வீரச்சாவடைந்த மேஜர் வன்னியன் அவர்களின் சகோதரனும்,
மாவீரர் லெப்.கேணல் குமரப்பா, மாவீரர் லெப்.கேணல் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 01.02.2000 அன்று கிளாலிப்பகுதியில்; வீரச்சாவடைந்த வீரவேங்கை யாளினி அவர்களின் சகோதரனும்,
முன்னாள் மருத்துவப்போராளி மாவீரர் சசிதரன் தாரிகா அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1997 இல் உயிலம்குளம் பகுதியில்; வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்ரினன்ட் இளந்தேவன் அவர்களின் சகோதரனும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. செவ்ரோன் தமிழ்ச்சோலை, டிரான்சி தமிழ்ச்சோலை, கவின் கலைப் பள்ளி மாணிவிகளின் எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பிரதிநிதியின் கவிதை, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பிரதிநிதியின் பேச்சு என்பவற்றுடன் சிறப்புப் பேச்சினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர் தனது உரையில், எமது தேச விடிவிற்காக, தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர் களை ஈகம் செய்த பல மாவீரர்களை நினைவிற்கொள்ள இம்மாதம் முக்கியமாக அமைந்திருக்கின்றது.
காலையில் எழுந்ததும் எமது நாட்டுக்காக தம்மைத் தந்த மாவீரர்களை நினைவிற்கொள்ளவேண்டும். அதுவே உண்மையான நினைவு வணக்கமாகும். அதன் பின்னர் நாம் நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இன்று நாம் எமது அரசியல் பயணத்தை நல்ல உத்தியோடு கொண்டுசெல்லவேண்டிய கடப்பாட்டுக்குள் நிற்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் எமது கடமைகளை சரிவரச்செய்யவேண்டும் என்றவாறு சிறப்புப் பேச்சு தொடர்ந்தது.
நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…” பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.