அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படாததை கண்டித்து கடந்த புதன்கிழமை தொடக்கம் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு முன்னாள் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மழை, வெயிலுக்கு மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 100ற்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகள் இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாhரிகள் சங்கத்தின் செயலாளர் பா. தாட்சாயன் கருத்து தெரிவிக்கையில், 6வது நாளகாக இன்று தொடரும் இப் போராட்டத்தில் இதுவரை பலர் மயக்கமடைந்து திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்பொழுதும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டத்துக்கு முதல் 2 தடவைகள் இங்கே நாங்கள் போராட்டம் நடத்தியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறிய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில்; முதலமைச்சர் எங்களை சந்தித்து கதைத்தார் அவரிடம் நாங்கள் கூறிய விடயம் எழுத்து மூலமான உறுதிமொழி தந்தால் மாத்திரமே எமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவோம். அதுவும் கால வரையரை குறிப்பிட வேண்டும். பாகுபாடு இல்லாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட வேண்டும் என அவரிடம் நாம் குறிப்பிட்ட போது அவர் அதற்கு சாதகமான பதில் தரவில்லை.
இந்த நிலையில் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். மட்டக்களப்பு, திருகோணமலையில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளும், இப் போராட்டத்தில் இணையுமாறும் இனத்தின் அடிப்படையில் நாம் புறக்கணிக்கப்படுவதால் பெற்றோர்களும் இப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் மற்றும் அவருடன் திருகோணமலை நகரசபையின் முன்னாள் நகரபிதா க. செல்வராஜா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதாக போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளிடம் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்