கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய ஐரோப்பா!

0
210

உக்ரைன் மின் கட்டமைப்பில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள அணு நிலையம் துண்டிக்கப்பட்டபோது ஐரோப்பா சாத்தியமான கதிர்வீச்சு அனர்த்தம் ஒன்றை எதிர்கொண்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

சபொரிஸ்ஸியா என்ற அணு நிலையத்தில் மாற்று மின்சாரம் வழங்கப்பட்டதை அடுத்தே அது பாதுகாப்பாக இயங்க ஆரம்பித்தது என்று அவர் மேலும் கூறினார்.

தீச் சம்பவங்களால் அணு நிலையத்தின் மின் இணைப்புகள் சேதமடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு நிலையமாக இருக்கும் இதன் வளாகத்திற்கு அருகில் தொடரும் மோதல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“மின் துண்டிப்பை அடுத்து தானியக்க செயற்பாடு மற்றும் ஆலையில் உள்ள எமது ஊழியர்கள் எதிர்வினையாற்றவில்லை என்றால், டீசல் மின்பிறப்பாக்கிகள் இயங்காவிட்டால் கதிர்வீச்சு விபத்தின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி இருந்திருக்கும்” என்று செலன்ஸ்கி கூறினார்.

ரஷ்ய ஷெல் தாக்குதலாலேயே இந்த சேதம் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த அணு நிலையத்தை சூழவிருக்கும் பகுதிகளின் கதிர்வீச்சு அளவு சாதாரண நிலையிலேயே காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா அங்கு ஆயுதங்களை குவித்திருப்பதாகவும் ஆலையைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரைன் கூறுகிறது.

அதற்கு நேர்மாறாக, உக்ரைன்தான் அந்தப் பகுதியிலிருந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

சபொரிஸ்ஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யத் துருப்புகளை அகற்ற, சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் உதவியை உக்ரைன் நாடியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here