பொறிவைக்கும் ரணிலும் ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைகளுக்கு பொறிவைக்கும் புலம்பெயர் அமைப்புகளும்!

0
197

ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடர் வரும் போதெல்லாம் சிறி லங்கா அரசு பல தந்திரங்களைக் காலத்துக்காலம் உருவாக்கிச் சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற அரசியல் ஏமாற்று நாடகம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

21வது நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்சவுடன், நீண்ட கால திட்டமிடலுடன் தமிழின அழிவுக்கு முக்கிய காரணமாக இன்றும் இருந்து வரும் ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களின் இன்றைய பொருளாதாரச் சூழலைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் காய்களை நகர்த்தி ராஜதந்திரமாக ஜனாதிபதிப் பதவியைக் கையகப்படுத்துக்கொண்டு ராஜபக்சாவின் நம்பிக்கைக்குரிய காவலனாக இருந்து வருவதையே கண்கூடாகக் காண்கின்றோம்.

இந்தச் சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழரை நோக்கித் தனது நரிப்பார்வையை திருப்பி இருக்கிறார். 74 வருடங்களுக்கு மேலாகப் புரையோடிப் போயுள்ள தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கும், சிங்கள மக்களின் அரசுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்துக்கும் தீர்வைக் காண வேண்டிய நேரத்தில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் நோக்கித் தனது செயல்பாட்டை ஆரம்பித்து இருக்கிறார் என்பதை நாம் மிகுந்த அவதானத்துடன் நோக்க வேண்டும்.

உள்நாட்டுப் பிரச்சனை என்றும், பயங்கரவாதச் செயல்பாடு என்றும் உலகிற்கு சொல்லி, 2009ல் மிகப்பெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்த சிங்களதேசம் 13 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்குப் பொறுப்புக் கூற தவறிவிட்டது. 2000 நாட்கள் கடந்தும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நிற்கதியாக நிற்கும் சொந்தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சில் சில அமைப்புகள் ஒன்றிணைந்து 30ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

பல கொலைகள் செய்து ஆயுள் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளை விடுதலை செய்து இருக்கிறார் இந்த மக்கள் ஆதரவற்ற சனாதிபதி. நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்து கடூழியச் சிறைத்தண்டனை பெற்றவரை விடுதலை செய்ததோடு அரசாங்கத்தில் இணைக்க முடிவுசெய்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் ஓரவஞ்சனை நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் இன்றுவரை நீதி வழங்கப்படாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இறுதிக்கட்டப் போரின்போது சர்வதேசத்தின் விதிகளுக்கும் சட்டத்திற்கும் அமைய சரண் அடைத்த 18000ற்கு மேட்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை ஒரு தகவலும் இ;ல்லை. 13 ஆண்டுகள் கடந்தும் அதற்கான பொறுப்புக்கூறாமல் சிங்கள அரசும், ஆட்சியாளர்களும் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் தங்களுக்குத் தலையாட்டும் சிங்கள ஆட்சியாளர்களை அரியணை ஏற்றுவதில் சர்வதேசம் முனைப்புக் காட்டுகிறது.

வழமைபோலச் சிறிலங்காவின் இராசதந்திர நகர்வாக ஜெனீவா கூட்ட தொடருக்கு முன் ரணில் புலம்பெயர் அமைப்புகளை நோக்கித் தனித்தனியாகப் பேசுவதற்கு அழைப்பு விட்டிருக்கிறார். இதில் கனடாவில் இயங்கும் நீதிக்கும் சமாதானதுக்கும் ஆனா அமைப்பு, (தமிழர்களுக்கு நீதியும் சமாதனமும் பெற்றுக்கொடுக்காத எடுபிடி அமைப்பு) மற்றும் உலகத் தமிழ் பேரவை (ஏற்கவே தடம்மாறி பயணித்துத் தமிழர் தேசத்தை விற்ற அமைப்பு) இலங்கை அரசின் பாதுகாவலராக இறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த 13 வருடகாலத்தில் பல கொள்கைப்பற்றுக் கொண்ட அமைப்புக்கள் காலத்தின் தேவைகருதி அர்ப்பணிப்புடன் இன்று வரை அரசியல் ரீதியாகச் செயற்பட்டு வருகின்றனர். மனிதவுரிமை சபையில் சிறி லங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் வலுப்பெறுவதற்கு பல புலம்பெயர் அமைப்புகள் முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறார்கள்.

புலம்பெயர் அமைப்புக்களை உடைக்கவும், ஒற்றுமையைக் குலைத்து மனங்களைக் குழப்பவும் தற்பொழுது மனோகணேசன் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். மேல்மகாண அரசியல்வாதியான இவர் தன் இனத்தை மறந்து பல வழிகளில் சிங்கள அரசிற்குப் பலம் சேர்த்து வருபவர். தமிழ்மக்களை பற்றியோ அவர்களின் உரிமைகள் பற்றியோ என்றுமே ஆணித்தரமான கருத்துகளைப் போர்க்காலத்திலும் சரி இன்றும் சரி பேசாத சுயநலவாத அன்னியரின் முகவராவார். மனோ கணேசனுடன் பேசப் புலத்தில் ஒருசில தேசவிரோத அமைப்புக்கள் தயாராகத்தான் உள்ளனர்.

அன்றைய தமிழர் அரசியல் தலைவரான தந்தை செல்வா முதல், தமிழீழ விடுதலை புலிகளின் காலம்வரை, பல பேச்சுக்களில் மாறிமாறி வந்த ஒவ்வொரு அரசுடனும் ஈடுபட்டார்கள். ஒரு பேச்சுவார்தைகளும் பயனளிக்காமல் நீர்மேல் எழுதிய எழுத்தாகவே போனது. சிறையில் நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக அநியாயமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல் போன்ற விடையங்களில் தமிழ் மக்கள் எதிர்பாப்புடன் இருந்த வேளையில், பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் வந்த இன்றைய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கண்ணீருடன் தமக்கு நீதியான பதில் கேட்ட மக்களுக்கு, காணாமல் போனவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று திமிராகப் பதில் கூறினார். இதே போன்ற ஒரு பதிலையே நல்லிணக்க அரசு என்று சொல்லிச் சனாதிபதியான மைத்திரிபாலாவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனவாத சிங்கள தேசத்தின் 74 வருடகால ஏமாற்றுவித்தையினை தமிழர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. சிங்களத்தின் இனவாத அரசியலை சர்வதேசம் புரிந்து கொண்டும் பாராமுகமாக இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. சர்வதேச நியமங்களுக்கு அமைய தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசியல் ரீதியாகப் பல புலம்பெயர் கட்டமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர். எமது முன்னெடுப்புக்களைச் சிதைத்துச் சீரழிக்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கு ஒன்றை ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுப்பதை நிறுத்துங்கள், நிரந்தர அரசியல் தீர்வுக்கான நிபந்தனைகளின்றி எந்தப் பொருளாதார உதவிகளையும் செய்ய எத்தனிக்க வேண்டாம், எந்தப் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்தாலும் அது சர்வதேச நாடுகளின் உத்தரவாதமின்றி நடைபெறக் கூடாது, என்று திடமாக ஆணித்தரமான அறிக்கைகள்மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் உலக தமிழர் பேரவை தொடர்ச்சியாக ரணில் ஆட்சியின் பாதுகாவலனாகத் தொடர்ந்தும் இயங்கிவருகின்றது. மேற்கின் முகவர்களாகவும் தமிழினத் துரோகிகளாகவும் தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றார்கள். பல அமைப்புகள் இணைந்து சனநாயக ரீதியாக உருவாக்கிய உலகத்தமிழர் பேரவை இன்று மூன்று நான்கு நபர்களின் தனிநபர் நிறுவனமாகச் செயற்பட்டுவருகிறது.

உலக தமிழர் பேரவை, கனேடிய நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு போன்ற அமைப்புகள் செய்யும் ஈனச்செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இவர்கள் போன்று வேறு புலம்பெயர் அமைப்புகளும் இப்படியான நாசகாரக் செயலைச் செய்து தமிழர் அடையவேண்டிய நிரந்தர அரசியற்தீர்வைச் சீரழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பிரான்சிலும், மற்றும் புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கும் இந்த நேரத்தில், எமது மக்களின் விடுதலைக்காக, சிறி லங்கா அரசின் சதிவலைக்குள் தமிழ் மக்களையும், தமிழ் அமைப்புகளைப் பிரித்து ஆளும் சதிவலைக்குள்ளும் சிக்காமல், கடந்த கால அனுபவங்களைக் கவனத்தில் கொண்டு, எமது மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கும், தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை வென்றெடுக்கவும் போராடுவோம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here