பிரான்சில் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம்!

0
412


சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும், பிரான்சு வாழ் தமிழ் மக்களின் பேரெழுச்சிப் போராட்டம் பிரெஞ்சு தேசப் பாராளுமன்ற முன்றிலில் மிகவும் பேரெழுச்சியோடு இன்று (01.03.2021) திங்கட்கிழமை இடம்பெற்றது.


கோவிட் 19 சுயபாதுகாப்பைக் கடைப்பிடித்து, பேரெழுச்சியாக தமிழீழத்தேசியக்கொடிகளுடன் மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பு மற்று தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பிற்பகல் 13.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், பொதுச்சுடரினை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் செல்வி அருட்செல்வம் ஜிலானி அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசையினை மூத்த கலைஞர்கள் மக்களின் முன் வாசித்தளித்தனர். கொள்கைவிளக்க உரையினை பிரெஞ்சுமொழியில் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர் தவராசா சஞ்ஜீத் அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால், கலந்துகொண்ட மக்களின் முன் கையொப்பம் பெறும் நிகழ்வு இடம்பெற்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த கையெழுத்துப் பெறப்பட்டது. மக்கள் அனைவரும் குறித்த கையொப்பம் இடும் நிகழ்விற்கு ஒத்துழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குர்திஸ்டான் அமைப்பின் பிரதிநிதிகளும் பதாகைகளையும், தேசியக்கொடிகளை ஏந்தியவாறு நிகழ்விற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து, குர்திஸ்டான் அமைப்பின் சார்பில் Mme Beraven firat அவர்களும் செவ்ரோன் நகரபிதா M.Stephan Blanchet அவர்களும் உணர்வுபொங்கத் தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.
இனவாதத்துக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதி திருமதி மரி ஜெரோபியல் வேஜோன் அவர்கள் தமது கருத்தினைப் பதிவுசெய்திருந்தார். பசுமைக்கட்சியின் பிரதிநிதி M.Patrick fabiaz அவர்களும் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் அரங்கில் ஒருமித்து உணர்வுக் கோசங்களை எழுப்பிய போது நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் திடல் அதிர ஓங்கிக் குரல் எழுப்பியமை நிகழ்வை மேலும் உணர்வாக்கியது.
தொடர்ந்து ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து பிரான்சு கொலம் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி சுதேசனா ரவிமோகன் அவர்களின் பிரெஞ்சுமொழி உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் ஞானசீலன் நிதர்சன் அவர்களினது பிரெஞ்சுமொழியிலான் உரை, கிளிச்சி தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் பிரெஞ்சு காணொளி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர் செல்வன் விநாயகமூர்த்தி மீராஜ் அவர்கள் பிரெஞ்சுமொழியிலான உரையும் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி அருட்செல்வி ஜிலானி அவர்களின் பிரெஞ்சுமொழி உரையும், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் சிந்துஜன் கிருபானந்தன் அவர்களின் பிரெஞ்சு மொழி உரையும் இடம்பெற்றிருந்தவேளை, திரு.கொலின்ஸ் அவர்களின் ஆங்கில மொழி உரையும் இடம்பெற்றிருந்தது.
நிறைவாக, தமிழீழ மக்கள் பேரவையின் பேச்சாளர் திரு.விநாசித்தம்பி மோகனதாஸ் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தபோது அனைத்து இளையோரும் தமிழீழத் தேசியக்கொடிகளை ஏந்தியிருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு உணர்வோடு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here