பிரான்சில் தென்னாபிரிக்கா வைரஸ்: தீவிரமான மறுதொற்றுடன் ஆஸ்மா நோயாளி அனுமதி!

0
422

பிரான்ஸில் வைரஸின் தீவிரமான மறு தொற்றுக்குள்ளாகிய (reinfection) நோயாளி ஒருவரது விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

58 வயதான ஆண் ஆஸ்மா (asthma) நோயாளி ஒருவருக்கே நான்கு மாத இடை வெளிக்குள் இரண்டாவது தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக் காவில் தொடங்கிய திரிபு மாறிய வைரஸினால் அவர் இரண்டாவது தடவை மோசமாகப் பீடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பரில் மூச்சு விட முடியாத நிலையில் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களில் தொற்றின் அறிகுறிகள் மறைந்து அவர் குணமடைந்தார். டிசெம்பர் மாதம் இரண்டு தடவைகள் செய்யப்பட்ட பரிசோதனைகள் அவரை தொற்று அற்றவர் (negative) என்று நிரூபித்தன.

மறுபடியும் கடந்த மாதம் (ஜனவரி) அவரை வைரஸ் தாக்கியது. இந்தத் தடவை அது உரு மாறிய புதிய வைரஸ் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்தனர். தற்சமயம் அவர் செயற்கைச் சுவாசத்துடன் மிக ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார் – என்ற விவரத்தை பாரிஸ் மருத்துவமனைகளின் ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்ற மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்கா, பிறேசில் போன்ற நாடுகளில் ஆரம்பித்த திரிபு வைரஸ் வகைகள் வலுவான முறையில் மறு தொற்றை ஏற்படுத்தக் கூடியன என்ற அச்சத்தை இந்த சம்பவம் நிரூபிப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

பிரான்ஸில் பிரிட்டன், தென்னாபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளின் புதிய வைரஸ் தீவிரமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.பாடசாலைகள் சிலவற்றிலும் புதிய வைரஸ் தொற்றுக்கள் தெரியவந்துள்ளன.

ஜேர்மனிய எல்லையோரம் அமைந்துள்ள Moselle மாவட்டம் மோசமான தொற்றுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன், தினமும் அங்கு நூறுபேர் வரை தென்னாபிரிக்கா, பிறேசில் போன்ற புதிய வைரஸ் திரிபுகளின் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற தகவலை வெளியிட்டார். அந்த மாவட்டத்தை நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டித்து மூடி முடக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. அங்கு தடுப்பூசி ஏற்றும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

(படம் :பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் தீவிர நிலையில் உள்ள புதிய வைரஸ் தொற்றாளர் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்ற காட்சி – AFP)

குமாரதாஸன். பாரிஸ்.
13-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here