தொண்டுப் பணியாளரது உடல்களுக்கு ஓர்லி விமான நிலையத்தில் அஞ்சலி!

0
220

நைகர் நாட்டில் கொல்லப்பட்ட பிரெஞ்சு தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் ஆறு பேரின் உடல்களுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

விமானம் மூலம் எடுத்துவரப்பட்ட உடல்கள் இன்று பிற்பகல் ஓர்லி(Orly) விமான நிலையத்தின் விசேட அதிதிகள் வருகைப்பிரிவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. பிரதமர் ஜீன் காஸ்ரெக் தலைமையில் மூத்த அமைச்சர்களும் அரசுப் பிரமுகர்களும் உறவினர்களும் அங்கு வைத்து உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கொல்லப்பட்ட அறுவரும் நாற்புறங்களும் தீவிரவாத அச்சுறுத்தல் மிக்க நைகர் நாட்டில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுவரும் அக்ரட் ( NGO Acted ) என்னும் பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவர்களாவர்.

25-30 வயதுக்கிடைப்பட்ட பணியாளர்களான நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கூடவே நைஜீரியா நாட்டைச் சேர்ந்த வாகன சாரதி, வழிகாட்டி உட்பட மொத்தம் எட்டுப்பேர் கடந்த ஞாயிறன்று தலைநகர் நைமிக்கு(Niamey) வெளியே Kouré என்னும் இடத்தில் வைத்து தாக்கிக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் பயணம் செய்த வாகனம் ஆயுதபாணிகளால் வழிமறித்துத் தாக்கப்பட்டு தீயில் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டது. உடல்களும் தீயில் கருகி உருக்குலைந்த நிலையிலேயே மீட்கப்பட்டன.

ஒட்டகச் சிவிங்கிகளின் புகலிடமாக விளங்கும் Kouré என்னும் இடத்தில் நடந்த இத்தாக்குதல் மேற்கு நாட்டவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை.

இத் தாக்குதலை அடுத்து நைகர் உட்பட சாஹல் பிராந்திய நாடுகளில் உள்ள பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.

14-08-2020
வெள்ளிக்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here