பிரான்சில் பெண் அமைப்புக்கள் போர்க்கொடி!

0
259

பிரான்ஸில் பிரதமர் Jean Castex அவர்களது அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகப் பெண் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

பொலீஸ் உட்பட உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு வாய்ந்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin, நீதித்துறை க்கான அமைச்சர் Eric Dupond-Moretti ஆகிய இருவரது நியமனங்களையும் எதிர்த்தே பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களைத் தொடக்கியுள்ளனர்.

பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்ப்பு நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையில் பெண்களும் பல்கலைக்கழக மாணவிகளும் பங்கு கொண்டனர். NousToutes என்னும் பெயரிலான புதிய பெண்ணிய இயக்கம் ஒன்று முகநூல் ஊடாக இந்த ஆர்ப்பாட் டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

#MeToo சகாப்தத்தின் போது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி Gérald Darmanin ஆவார். 2009 இல் நகரசபை உறுப்பினராகப் பதவி வகித்த சமயம் தன்னிடம் சட்ட உதவி கேட்டு வந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற புகாரை அடுத்து அவர் மீது வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அது இன்னமும் முடிவுறவில்லை. ஆயினும் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு உள் துறை அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட் டுள்ளது.

இதேபோன்று #MeToo இயக்க காலப் பகுதியில் வெளிவந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களையும் அத்து மீறல்களையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்தவர்களில் ஒருவர் Eric Dupond-Moretti ஆவார். பிரான்ஸின் பிரபல நட்சத்திர சட்டவாளரான இவர், MeToo வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பாதுகாக்க வாதாடியவர் என்று பெண்ணியவாதிகளால் கடுமையாக கண்டிக்கப்படுகிறார்.பிரான்ஸின் நீதிபதிகள் மட்டத்திலும் இவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அமைச்சரவையில் நீதி அமைச்சராக இவரை நியமித்ததன் மூலம் பெண்களின் பாதுகாப்பு, சம உரிமை போன்ற விடயங்களில் அதிபர் மக்ரோன் தேர்தல் காலத்தில் வழங்கியிருந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டார் என்று பெண் அமைப்புகள் கோஷம் எழுப்பி வருகின்றன.

புதிய அமைச்சரவையில் பாலியல் வன்முறையாளர்கள் இடம்பிடித்துள்ளனர் என்றவாறாக பெண்கள் எழுப்பி வரும் கண்டனக் குரல்களுக்கு மத்தியில் பிரதமர் Jean Castex சர்ச்சைக்குரிய இந்த இரு அமைச்சர்களது நியமனங்களையும் நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருக் கிறார்.

10-07-2020
வெள்ளிக்கிழமை. –குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here