பரிஸ் கார் து நோர்ட் தொடருந்து நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை!

0
530

பாரிஸ் நகரின் மையத்தில் அமைந்துள்ள Gare De Nord ரயில் நிலையத்தைப் புனரமைத்து விரிவுபடுத்தி பெரும் வணிக வளாகமாக மாற்றுகின்ற கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இந்த வாரம் கைச்சாத்தாகி உள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இத்திட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்படுகிறது.

ஐரோப்பாவின் பரபரப்பு மிகுந்த இந்த மிகப் பெரிய ரயில் நிலையத்தின் விரிவாக்கத்தை சுமார் 600 மில்லியன் ஈரோக்கள் செலவில் துரித கதியில்- 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாகப் பூர்த்திசெய்யும் இலக்குடன்- ஆரம்பித்து முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 46 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பில் வணிக வளாகங்களும் 30 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பில் பயணிகள் தரிப்பிடங்கள், விளையாட்டிடம், பூங்கா என்பனவற்றை உள்ளடக்கியதாக தற்போதைய ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படவுள்ளது.

இல் து பிரான்ஸ் பிராந்திய நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த ரயில் நிலைய விரிவாக்கத் திட்டத்தை பாரிஸ் நகரசபை கடுமையாக எதிர்க்கிறது.

மேலும் ஆறு ஆண்டுகளுக்கு மேயராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஆன் ஹிடல்கோ தலைமையிலான பாரிஸ் நகர நிர்வாகம் ரயில் நிலையத்தை புனரமைப்பதை ஆதரித்தாலும் அதனை ஒரு வர்த்தக நோக்குடைய வளாகமாக விஸ்தரிப்பதை கடுமையாக எதிர்த்து வருகிறது.

நகரின் மத்திய பகுதியை மேலும் நெரிசலுக்கு உள்ளாக்கக் கூடிய வகையில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்குவது பசுமை நகரம் என்னும் தமது இலக்குக்கு முரணானது என்று நகர நிர்வாகம் கருதுகிறது. அப்பகுதி குடியிருப்பாளர்களும் ரயில் நிலையத்தை தேவைக்கு அதிகமாக விரிவாக்குவதை எதிர்க்கின்றனர்.

சாத்தியமான சட்டங்கள் மற்றும் அரசியல் வழிமுறைகள் ஊடாக இத் திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கப்போவதாக நகரசபை துணை மேயர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

லண்டனுக்கான ஈரோஸ்ரார்(Eurostar) , ஐரோப்பிய நகரங்களுக்கான தலிஸ் (Thalys) , RER, TGV, கடுகதி ரயில்கள் இரண்டு மெற்றோ ரயில் தடங்கள் போன்ற பல முக்கிய ரயில் போக்குவரத்து சேவை வலையமைப்புகளை ஒருங்கிணைக்கும் கேந்திர மையமாகத் திகழும் Gare De Nord நிலையத்தை தினசரி சுமார் ஏழு இலட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரான்ஸ் தமிழர்களின் வர்த்தக மையமாகிய La Chapelle பகுதி இந்த ரயில் நிலையத்தை அண்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

10-07-2020
வெள்ளிக்கிழமை. – குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here