வடக்கில் வனலாகா பிரிவினரும் காணிகளைச் சுவீகரிக்க முயற்சி!

0
193

ravikaran-mullai11வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வனலாகா பிரிவினர் தமக்குச் சொந்தமான நிலங்கள் என அடையாளப்படுத்தி பொதுமக்களுடைய நிலத்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது.

வடக்கில் போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காகவும், பொதுத்தேவை என அடையாளப்படுத்தப் பட்டு படையினர் மற்றும் கடற்படை, விமானப்படையினரின் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு சுவீகரிக்கப்படுவதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் 3-வது முயற்சியாக வனலாகா பிரிவினர் தமக்குச் சொந்தமானவை
என அடையாளப்படுத்தி பெருமளவு பொது மக்களின் நிலத்தை சுவீகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

இதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரிப்பட்ட முறிப்பு, மண வாளம்பட்டு மற்றும் நெடுங்கேணி பகுதி ஆகியவற்றில் பொது மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் வாழ் நிலங்கள் வனலாகா பிரிவினரால் சுவீகரிப்பதற்காக எல்லைகளிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த காணிகள் மக்களால் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில்  புதுக்காடு மற்றும் காந்தி கிராமம் போன்றனவும் மேற்கண்டவாறு வனலாகா பிரிவினரால் சுவீகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

மேற்படி காணிகளிலும் மக்கள் தற்போதும் வாழ்ந்து வருவதுடன் அந்தப் பகுதிகளில் மக்களுக்கு வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இவ்வாறு வனலாகா பிரிவினர் காணிகளை சுவீகரிப்பதற்கான அப்பகுதி பிரதேச செயலர் மற்றும் கிராமசேவகர் ஆகியோருடன் தொடர்பு கொள்ளாமல் தாங்களாகவே பல ஆண்டுகளுக்கு முற்பட்ட வரைபடங்களை அடிப்படையாக கொண்டு காணிகளை அளந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அந்த வரைபடத்திலுள்ள காணிகள் பல பின்னர் வந்த அரசாங்கங்களினால் மக்களுக்கு வழங்கப்பட்டவை, இந் நிலையில் வடக்கில் நில சுவீகரிப்பு சமகாலத்தில் 3-வது புதிய வடிவம் எடுத்து வந்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here