திருச்சி பஸ் நிலையம் அருகே சுவரில் துளையிட்டு நகைக்கடையில் 13 கோடி கொள்ளை!

0
890

திருச்சியில் பிரபல நகைக்கடையின் பின்பக்க சுவரில் ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் கல்லூரியும் அதற்கு சொந்தமான வணிக வளாகமும் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை, ஓட்டல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியில் 3 மாடி கட்டிடத்தில் லலிதா ஜூவல்லரி இயங்கி வருகிறது. பிரபலமான இந்த கடைக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. திருச்சி கடைக்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது தீபாவளி விற்பனை நேரம் என்பதால், கடந்த சில நாட்களாக கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் இருந்தது. வழக்கமாக இரவு 10 மணிக்கு கடை பூட்டப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திறக்கப்படும். அதன்படி நகைக்கடை மேலாளர் ஹரிராமன் நேற்று காலை 9 மணிக்கு கடையை திறந்தார். அப்போது பணியாளர்கள் சிலரும் உடன் இருந்தனர். கடைக்குள் சென்ற மேலாளர் ஹரிராமனுக்கும், பணியாளர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் நகைகள் எதுவுமின்றி தரைதளம் வெறிச்சோடி காணப்பட்டது. கண்ணாடி பெட்டிகளுக்குள் பிளாஸ்டிக் அட்டைகளில் மாட்டி வைக்கப்பட்டிருந்த செயின், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் எதுவும் இல்லை. இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மேலாளர், பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கமிஷனர் அமல்ராஜ், துணைகமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா, எஸ்பி ஜியாவுல்ஹக், கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று நகைக்கடையை பார்வையிட்டனர். அப்போது கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து கல்லூரிக்குள் புகுந்து, பின்னர் கடையின் பின் பக்க சுவரில் துளையிட்டு கைவரிசை காட்டி உள்ளனர். கடையின் தரை தளத்தில் செயின், ஆரம், நெக்லஸ் போன்ற நகைகள் வியாபாரம் நடைபெறும். இங்கு விற்பனை செய்யப்படும் நகைகள் 5 பவுன் முதல் 10 பவுன் வரை இருக்கும். இதுதவிர விலை உயர்ந்த வைர நகைகளும் தரை தளத்தில் விற்பனை செய்யப்படும். கடையின் முதல் தளத்தில் மோதிரம், தோடு, வளையல் போன்ற நகைகள் இருக்கும். 2ம் தளத்தின் ஒரு பகுதியில் நகை விற்பனை, இன்னொரு பகுதியில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும், உணவருந்தும் பகுதி உள்ளது. தரை தளத்தில் குண்டு மணி தங்கம் கூட இல்லாமல் முழுவதையும் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. முதல் தளத்திலும் ஒரு பகுதி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 கிலோ தங்க நகைகள், 180 காரட் வைர நகைகள் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை போய் உள்ளது. தங்கத்தின் மதிப்பு ரூ.12.30 கோடி, வைரம், பிளாட்டின நகைகளின் மதிப்பு ரூ.72.90 லட்சம். ஆக மொத்தம் ரூ.13 கோடியே 90ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக கடை உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். 800 நகைகள் கொள்ளை: கிரண்குமார் மேலும் கூறுகையில், திருட்டு போன நகைகள் காலை முதல் இரவு வரை கணக்கிடப்பட்டது. இதில் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் எண்ணிக்கை 800 என்றும், இதன் மதிப்பு ரூ.13 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். தரைதளத்தில் மட்டும் கொள்ளை நடந்துள்ளது. 100 சதவீதம் ஆய்வு செய்து வழக்கு போடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அடையாளம் தெரியவில்லை, கைரேகையும் பதியவில்லை. கடையின் உள்ளே 2 பேர் வந்துள்ளனர். வெளியே எத்தனை பேர் இருந்தனர் என தெரியவில்லை. எங்களது கடையில் சிசிடிவி கேமரா நன்றாக இயங்குகிறது என்று தெரிவித்தார். கொள்ளை நடந்த இடத்தில் துப்பறியும் நாய் சோதனைக்கு விடப்பட்டது. அது முதல் தளத்தில் சுற்றி சுற்றி வந்தது. பின்னர் கடைக்கு பின்புறம் துளையிடப்பட்ட இடத்துக்கும் சென்று சுற்றி வந்தது. இதையடுத்து கல்லூரி மைதானத்தில் நாய் படுத்துக்கொண்டது. கைரேகை நிபுணர்கள் தரைதளம் மற்றும் முதல் தளம், சுவரில் துளையிடப்பட்ட இடங்களில் தடயங்களை சேகரித்தனர். நகைகடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இருவரும் குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்க முகம் கொண்ட முகமூடியை ஒரு நபரும், மற்றொருவர் முயல் பொம்மை முகமூடியையும் அணிந்திருந்தனர்இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஆள்நடமாட்டமுள்ள பகுதியில் நகைக்கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிருக முகமூடியுடன் கொள்ளையர் நடமாட்டம் நகை கடையின் தரை தளத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் முகமூடி அணிந்து கடைக்குள் நடமாடியதும், அதில் ஒருவர் கையில் பேக் வைத்திருந்ததும் பதிவாகி உள்ளது. இந்த 2 பேரும், வழக்கமாக முகத்தை மறைக்க பயன்படுத்தும் குரங்கு குல்லாவையோ அல்லது கர்ச்சீப்பையோ பயன்படுத்தவில்லை. குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்க முகம் கொண்ட முகமூடியை ஒரு நபரும், மற்றொருவர் முயல் பொம்மை முகமூடியையும் அணிந்திருந்தனர். கேமராவில் பதிவான உருவம் மற்றும் அசைவுகளை பார்க்கும் போது இருவருக்கும் 20 வயதுக்குள் தான் இருக்கும். பேன்ட், சட்டை அணிந்துள்ளனர். 2 பேருமே காலருடன் குல்லா பொருத்தப்பட்ட சட்டை அணிந்துள்ளனர். இந்த குல்லா மூலம் தலையை மூடி உள்ளனர். மேலும் கைரேகை பதியாமல் இருக்க 2 பேரும் கைகளில் கையுறை அணிந்துள்ளனர். அதிகாலை 3 மணி முதல்4 மணிக்குள் அரங்கேற்றம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கொள்ளை அரங்கேறி இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த நேரத்தில் இந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் யார் யாருக்கு போன் வந்துள்ளது, யார் யார் போன் பேசி இருக்கிறார்கள் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை வாங்குவது போல் கடைக்கு வந்து நோட்டம் சுவரில் துளையிட்டால் நேராக தரை தளத்தில் எந்த பகுதிக்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள கொள்ளையர்கள் ஏற்கனவே கடைக்கு நகை வாங்குவது போல் வந்து நோட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே கடந்த சில நாட்களாக கடைக்கு சந்தேகப்படும் வகையில் யாராவது வந்திருக்கிறார்களா என்றும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குவார்ட்டர் பாட்டில், ஸ்குரூ டிரைவர் துளையிடப்பட்ட சுவருக்கு அருகில் உள்ள கல்லூரி காம்பவுண்டு சுவர் மீது ஒரு காலி குவார்ட்டர் பாட்டில், ஒரு மிளகாய் தூள் பாக்கெட் இருந்தது. மேலும் கீழே ஒரு ஸ்குரூ டிரைவர் கிடந்தது. எனவே கொள்ளையர் மது அருந்தி விட்டு, கைவரிசை காட்டினரா என்றும் விசாரணை நடந்து வருகிறது. பணியாளர்களின் ரேகைகள் பதிவு கொள்ளை நடந்த நகை கடையில் 160 பேர் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று நகைக்கடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கைரேகைகளை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர். காவலர்கள் தூங்கி விட்டனரா? லலிதா ஜூவல்லரி கடைக்கு வெளியே இரவில் எப்போதும் 5 காவலாளிகள் பணியில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இவர்கள் பணியில் இருந்தனர். இவர்கள் கடையின் ஷட்டர் முன் அமர்ந்திருந்தாலே உள்ளே ஆட்கள் நடமாட்டம் இருக்கும் சத்தம் கேட்டிருக்கும். இவர்கள் தூங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. வந்தது எத்தனை பேர்? நகைகடையில் உலா வந்த 2 பேர் மட்டுமே கொள்ளையடிக்க வரவில்லை. இவர்களுடன் மேலும் சிலரும் வந்திருக்கலாம். ஏனெனில் 2 பேர் மட்டுமே சுவரை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டியிருக்க வாய்ப்பில்லை. மேலும் பேக் மூலம் பகுதி பகுதியாக நகைகள் துளை வழியாக வெளியில் சென்றுள்ளது. எனவே இன்னும் சில கொள்ளையர்கள் துளையிடப்பட்ட இடத்தின் அருகில் காத்திருந்திருக்கலாம் என ெதரிய வந்துள்ளது. மிளகாய் பொடி தூவிச்சென்றனர் கொள்ளை நடந்த தரைதளத்தில் சில இடங்களில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. அதேபோல் பின்பகுதியில் சுவர் துளையிடப்பட்ட இடத்துக்கு அருகிலும் மிளகாய் தூள் தூவப்பட்டுள்ளது. துப்பறியும் நாயை திசை திருப்புவதற்காக மிளகாய் தூளை கொள்ளையர் தூவிச்சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வடமாநில கொள்ளையர் நகை கடையில் கொள்ளையடித்தது வட மாநில கொள்ளையராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே திருச்சியில் ஏற்கனவே கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்களின் விவரங்கள், குறிப்புகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here