தற்போது இந்த அரசும் பொதுமன்னிப்பு வழங்குவதாகத் தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். தமிழினத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அன்று தந்தை செல்வா சொன்னார். இன்று இவர்களின் விடுதலைக்கும் கடவுளைத்தான் பிரார்த்திக்க வேண்டி இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
“நாங்கள்’ அமைப்பால், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றுமுன் தினம் சனிக்கிழமை ஒழுங்கமைக் கப்பட்ட உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“உங்களுக்காக நாங்கள். அதனைத் தான் இந்த “நாங்கள்’ அமைப்பினர் கூறியிருக்கின்றனர். அதற்கு செயல் வடிவமும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த அமைப்பின் தலைவர் தனது உரையில், தடைகள் பல வந்ததாகவும், அதனைப் படிக்கல்லாக மாற்றியதாகவும் குறிப்பிட்டார். தடைகள் வராவிட்டால் எங்களுக்கு கஷ்டங்கள் தெரியாது. எங்களை நோக்கி தடைகள் வருகின்றது என்றால், நாங்கள் அந்தளவு தூரத்துக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான் அர்த்தம்.
மக்களின் மீள் வாழ்வுக்கு உதவுவ தற்கு இந்த அமைப்பை நீங்கள் ஆரம்பித்திருக்கின்றீர்கள். இன்னும் உங்களுக்கு தடைகள் வரலாம். அதனையும், இதே போன்று படிக் கல் லாகத் தாண்ட வேண்டும்.
நாம் இன்னொருவனை தோற்கடித் துப் பெறுவதற்குப் பெயர் வெற்றி அல்ல. இதனை சுகிசிவம் தெளிவாகவே விளக்கியுள்ளார். நாம் எப் போதும், எங்களின் முழு சக்தியையும் திரட்டி, சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அவ்வாறுதான் இலக்கை அடைய வேண்டும். அதுவே உண்மையான வெற்றி.” என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் இந்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர், கொழும்பில் நின்றிருந்த போது, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை. சேனாதிராசாவுடன் மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன்.
கடந்த தடவை அங்கு சென்ற போது, 8 பேருக்கு மாத்திரமே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போது போன போது 30 பேர் வரையில் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விடயத்தை விசாரித்தேன். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டால், இரண்டு மூன்று வருடங்களில் விடுவிக்கப்படுவர்.
எனவே குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். அதனை நம்பி அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுவரை வழக்கில்லாமல் பத்து பதினைந்து வருடங்கள் சிறைக்குள் இருந்து விட்டு, இப்போது தீர்ப்பு மூலம் மேலும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரையில் சிறையில் இருக்கும் நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதில் இளம் பொறியியலாளர் ஒருவர் பத்து ஆண்டுகள் வரையில் இது வரை சிறையில் இருந்தார்.
அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மேலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக, ஒருவர் மீது பல்வேறு குற்றங்களைப் பதிவு செய்து அவர்களது வாழ்வை நிரந்தரமாகவே சிறைவைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்த ஒருவரிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்டால் 5 வருடம் சிறைத் தண்டனை. அதனை முடித்து விட்டு, நான் சாகின்ற காலத்திலையாவது மனைவி, பிள்ளைகளுடன் இருக்கலாம் என்றார். இதைக் கேட்கும் போதே எவ்வளவு கொடுமையாக இருக்கின்றது.
பத்து பதினைந்து வருடங்கள் காரணம் எதுவுமில்லாமல் சிறையில் அவர்களது இளமைக் காலத்தை தொலைத்து விட்டார்கள். இனித் தீர்ப்பு என்ற பெயரில் இன்னொரு பத்து பதினைந்து வருடம். அவர்களது வாழ்வே சிறைதானா? இவர்களை சிறைக்கு அனுப்பிய, இவர்களுக்கு கட்டளை பிறப்பித்த தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் சொகுசாகவும், முன்னாள் முதலமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.
அவர்களுக்கு வழக்கும் இல்லை. சிறையும் இல்லை. பொது மன்னிப்பும் சுகவாழ்வும். ஆனால் இவர்களுக்கு எதுவுமில்லை. கடந்த அரசும், இவர்கள் மீது கருணை காட்டி பொதுமன்னிப்பில் விடுவிக்கவில்லை. தற்போது இந்த அரசும் இவர்களை பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தந்தை செல்வா, தமிழினத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். ஆனால் இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு கடவுளை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.