இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் எல்லை கடந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த, தமிழக மீனவர்கள் 54 பேரை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். வடக்கு தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர குறிப்பிடுகையில்; அவர்கள் பயன்படுத்திய 10 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு மன்னார் நீதிவான் நிதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இந்நிலையில் இக்கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும் வரையில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய – இலங்கை மீனவர் கூட்டமைப்பின் தலைவர் என். தேவதாஸ் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முயற்சித்துவரும் நிலையில் இலங்கை அரசின் இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது.