ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம் பர் மாதத்தில் நிச்சயமாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை செப்டெம்பர் மாதத்தில் பிற்போடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை விநியோகிக்க தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் இதனைத் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதனை தடுக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் செப்டம்பர் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை தடுத்து நிறுத்த முடியாது என அவர் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30 ஆவது கூட்டத் தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை இரண்டாவது தடவையாகவும் வெளியிடாமல் காலம் தாழ்த்துமாறு பெரும்பான்மை உறுப்பு நாடுகள் கோரினால் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என மனித உரிமைகளுக்கான நிறுவனங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.
இதன்போது விசாரணை அறிக்கையை இன்று கூட வெளியிட முடியும், எனவும் செப்டம்பர் மாதம் வரையில் காத்திருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்படவிருந்த நிலையில் அதனை பிற்போடுமாறு மனித உரிமைப் பேரவையின் தலைவருக்கு ஆணையாளர் ஹுசைன் பரிந்துரை செய்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை பேரவையின் தலைவர் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அதன்படியே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிக்கை நிச்சயம் வெளிவரும் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.