ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கருணை காட்டுங்கள்!

0
469


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான தாமஸ், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு தலைமை வகித்த கே.டி. தாமஸ், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் “கருணை காட்டுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 1991ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் தண்டனையை குறைக்க தனது ஒப்புதலை அளிக்கும்படி அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ், சோனியாவுக்கு அக்டோபர் 18ம் தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய 2014ம் ஆண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்த போது, அதனை மத்திய அரசு எதிர்த்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஒருவேளை நீங்களும், ராகுலும், (முடிந்தால் பிரியங்காவும்), தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைச்சாலையிலேயே கழித்துவிட்ட அவர்களது தண்டனையைக் குறைக்க ஒப்புதல் அளிப்பதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினால், மத்திய அரசும், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க அனுமதிக்கும்.
இது மனிதநேயத்தோடு அணுக வேண்டிய, உங்கள் ஒருவரால் மட்டுமே உதவக் கூடிய விஷயமாக உள்ளது. ஒரு நீதிபதியாக, இந்த நபர்களுக்கு எதிராக நான் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், தற்பொழுதிருக்கும் சூழ்நிலையில், உங்கள் கருணையைக் கேட்டு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகத்திடம் தாமஸ் அளித்த பேட்டியில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், சிபிஐ விசாரணையில் சில முக்கியக் குறைகள் இருப்பதையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தை ஓய்வு பெற்ற நீதிபதியான தாமஸ் இவ்வாறு முடித்துள்ளார். அதாவது, இவர்கள் மீது கருணைக் காட்ட எல்லாம் வல்ல கடவுள்தான் அருள்புரிய வேண்டும். நான் இந்த கடிதத்தில் ஏதேனும் தவறாகக் கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here