விசாரணைக்காக சிவாஜிலிங்கத்தை கொழும்புக்கு அழைப்பு!

0
149

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் சனிக்கிழமை(22) கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். எனினும், அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.

நேற்றுக் காலை எம். கே. சிவாஜிலிங்கத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் உங்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளமையால் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு வர வேணடுமென அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் என்னால் கொழும்புக்கு வர இயலாது எனவும், யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொள்ளத் தயாரெனவும் பதிலளித்துள்ளார்.

குறிப்பாக மைத்திரி மற்றும் பெளத்த பிக்கு ஒருவர் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணைக்கான அழைப்பு தனக்கு விடுக்கப்பட்டுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாண ஊடக அமையத்தில் கடந்த மே மாதம்- 08 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடக அமையத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான தம்பிராசா பிரதீபன் அண்மையில் யாழ். அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here