தரையில் உருண்டு மோடியிடம் விவசாயிகள் கோரிக்கை

0
180

டெல்லி போராட்டத்தில் தரையில் உருண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக விவசாயிகள் இன்று கோரிக்கை விடுத்தனர். இவர்களில் 60 வயதுக்கு அதிகமானவர்களும் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வெறும் தரையில் உருண்டதால் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு உட்பட இருவர் மயக்கம் அடைந்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் 23-ம் நாளாகப் போராட்டம் தொடர்கிறது. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து தம் ஆதரவைத் தெரிவித்தபடி உள்ளனர். சமூக மற்றும் மாணவர்கள் அமைப்புகளாலும் கிடைக்கும் ஆதரவால் தமிழக விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாய சங்கங்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இதனால், மேலும் தீவிரம் அடைந்துள்ள போராட்டத்தை அன்றாடம் வித்தியாசமாக தமிழக விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்தவகையில் இன்று, விவசாயிகள் தரையில் உருண்டு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். தங்கள் கைகள் மற்றும் கால்களை கயிற்றால் கட்டிக் கொண்டு அவர்கள் உருண்டனர்.
தற்போது டெல்லியில் கொளுத்தும் வெயிலில் ஜந்தர் மந்தரின் பந்தலுக்குள் அமர்வதும் முடியாமல் உள்ளது. இந்தநிலையில், தரை விரிப்புகள் இல்லாத வெறும் சாலையில் விவசாயிகளில் சிலர் உருண்டு போராட்டம் நடத்தினர். இதை பார்த்த டெல்லிவாசிகள் சில நிமிடங்கள் நின்று அதிர்ச்சியுடன் பார்வையை செலுத்திச் சென்றனர்.
போராட்டத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு உட்பட 60 வயதிற்கும் அதிகமானவர்களும் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினர். இதில், 72 வயதான அய்யாகண்ணு மற்றும் 74 வயது பழனிசாமி ஆகிய இருவரும் திடீர் என மயக்கம் அடைந்தனர். இதனால், அவர்கள் அவசரமாக அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
காலையில் உணவு உண்ணாததால் மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அய்யாகண்ணு மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் போராட்டக் களமான ஜந்தர் மந்தர் பகுதிக்குத் திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here