
காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ந்தேதி நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள், ஒரு நேபாள நாட்டுக்காரர் என 26 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த இந்தியா நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று அறிவித்தது.

பிரதமர் மோடி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். கடந்த 2 வாரங்களாக இந்த ஆலோசனை நீடித்தது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தை சீர்குலைய செய்யும் வகையில் முதல்கட்ட நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா ராணுவ ரீதியிலான நடவடிக்கையை எப்போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்ததால் அதன் பிறகுதான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பலரும் நினைத்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத நிலையில் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அதிரடி தாக்குதலை தொடங்கின.
இந்திய விமானப்படை, கடற்படை, தரைப்படை மூன்றும் ஒருங்கிணைந்து மிகவும் திட்டமிட்டு இந்த துல்லிய தாக்குதலை மேற்கொண்டன.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.
சிந்தூர் என்றால் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமப்பொட்டு என்ற அர்த்தமாகும்.

25 இந்திய பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்த தீவிரவாதிகளுக்கு மரணஅடி கொடுக்கும் வகையில் இந்த பதிலடி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடியே இந்த பெயரை தேர்வு செய்து சூட்டி இருந்தார்.
மொத்தம் 9 இடங்களில் இந்தியாவின் முப்படைகள் குண்டு மழை பொழிந்தன.
நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இந்த 9 இடங்களும் சரமாரியாக நொறுக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டன. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய இந்த அதிரடி சுமார் 25 நிமிடங்கள் ஓசையின்றி நடந்தது.

இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய 9 இடங்களில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் பதுங்கு இடங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் ஆகும்.
4 இடங்கள் பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வந்த இடங்கள் ஆகும்.
இந்த 9 இடங்களும் ஒரே நேரத்தில் தாக்கி தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதிலும் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்தியாவின் முப்படைகளும் இதில் நேற்று இரவு மிக மிக கவனமாக இருந்தன.
பாகிஸ்தான் ராணுவத்தை தவிர்த்து விட்டு அதே சமயத்தில் பாகிஸ்தான் நாட்டுக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானங்கள் குண்டு மழை பெய்யச்செய்து நொறுக்கின.

தாக்குதல் நடத்தப்பட்ட 2 இடங்களில் பாகிஸ்தானில் உள்ள முரிட்கே மற்றும் பகல்வப்பூர் என்ற 2 இடங்களும் மிக மிக முக்கியமான இடங்கள் ஆகும்.
முரிட்கே நகரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீது என்பவன் தனது தலைமை பயிற்சி முகாமை அமைத்து இருந்தான்.
அந்த இடத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை மூளை சலவை செய்து அவன் ஆயுத பயிற்சி கொடுத்து வந்தான்.

அந்த தலைமை பயிற்சி முகாம் சரமாரி ஏவுகணை தாக்குதலால் துவம்சம் செய்யப்பட்டது.
அதுபோல பகல்வப்பூர் என்ற இடத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத்அசார் என்பவன் தனது தலைமை பயிற்சி நிலையத்தை அமைத்து நடத்தி வந்தான்.
அந்த பயிற்சி நிலையத்திலும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்தனர்.
இந்த இரு பயிற்சி முகாம்களில் இருந்துதான் அதிகபடியான தற்கொலை படை தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து நாசவேலை செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
இந்த இரண்டு முக்கிய முகாம்களும் நேற்று இரவு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் 9 இடங்களில் இந்திய முப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மசூத்அசார் தீவிரவாதி தலைமையில் செயல்படும் இடத்தில் அதிகபடியான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த ஒரு இடத்தில் மட்டும் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் தீவிரவாதிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கையை அது குறைத்து கூறிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத்அசார் வீடு இந்திய ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அவன் பலத்த பாதுகாப்புடன் வசித்து வருகிறான். என்றாலும் அவனது வீடு இந்தியாவின் துல்லிய தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது.
இதில் அவன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் மசூத் அசார் இறந்தானா? என்று உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் அவனது உறவினர்கள் 14 பேர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானுக்குள் இந்திய விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்களுக்கு மிக பலத்த அடி விழுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
அதிகபட்சமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஹபிஸ்சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் 3 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த 2 தீவிரவாத இயக்கங்களுக்கும் துணை நின்ற மற்றொரு அமைப்பின் 2 முகாம்களும் தகர்க்கப்பட்டு உள்ளன.
இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியா நேற்று இரவு தாக்குதலின்போது தற்கொலை விமானம் என்று அழைக்கப்படும் கமிகாஷே வகை டிரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்தியது.
இந்த வகை டிரோன்கள் குறிப்பிட்ட இலக்கு மீது துல்லியமாக விழுந்து குண்டுகளை வெடிக்க செய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்திய ராணுவம் முதல் முறையாக இந்த தற்கொலை விமானத்தை நேற்றைய தாக்குதலுக்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த டிரோன்கள் மூலம் ஹேமர் வகை குண்டுகளை இந்தியா வீசி இருப்பது தெரிய வந்து உள்ளது.
இந்த ஹேமர் குண்டுகள் ஒவ்வொன்றும் தலா 2.5 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை ஆகும்.
நேற்றைய குறுகிய நேர தாக்குதலில் மட்டும் இந்திய ராணுவம் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை கையாண்டு இருக்கிறது.
தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி நேற்று இரவு 1.44 மணிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் தீவிரவாதிகள் அமைத்து இருந்த உள்கட்டமைப்புகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டுள்ளன.
9 இடங்களில் தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எதுவும் குறி வைத்து தாக்கப்படவில்லை.
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மற்ற தகவல்கள் பின்னர் விரிவாக வெளியிடப்படும்.
இவ்வாறு ராணுவ அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதல் பற்றி அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிடம் மத்திய அரசு இன்று காலை விளக்கமாக தெரிவித்தது.
தீவிரவாதிகளின் இடங்கள் மட்டும் தகர்க்கப்பட்ட தகவல்கள் தெளிவுப்படுத்தப்பட்டன. இதை அந்த நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்த நாட்டு ராணுவம் பதிலடிக்கு தயாராகி வருகிறது.
அதை எதிர்கொள்ள இந்தியாவும் முப்படைகளை உஷார்ப்படுத்தி வைத்துள்ளது.
5 மாவட்டங்களில் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் மீதான தாக்குதல் பற்றி ராணுவ அமைச்சகம் டெல்லியில் இன்று காலை விரிவான விளக்கம் அளித்தது.
(நன்றி: இணையம்)