
மாத்தளன் இறுதி நாளும் ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி முகாம் நோக்கிய என் பயணமும் முகாம் வாழ்வின் நாட்களும்-01
(எட்டு வருடங்களுக்கு முதல் எழுதியது)

2009.04.20
“ஆமி கிட்ட வந்துட்டான்” என்ற எங்கிருந்தோ வந்த குரலொலி அன்றைய விடியலின் ஆரம்பமாய் அமைந்தது
இரவிரவாய் பெய்ந்துகொண்டிருந்த மழையும் சீறிப்பாய்ந்த சன்னங்களும் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த எறிகணைகளும் மெல்லக் குறைந்து கொண்டிருந்தது
இன்றைய இருப்பிடத்தின் இறுதி நாள் இதுதான் என்பதையும் நிலமைகள் உணர்த்திற்று
பல நாட்களாய் உறக்கம் மறந்துபோன விழிகள், குண்டொலிகளையும் ஓலங்களையும் கேட்டுப் பழகிப்போன செவிப்பறைகள், கந்தக வாசனையையும் இரத்தவாடையையும் மட்டுமே நுகர்ந்து பழகிப்போன நுரையீரல்
ஷெல் விழுந்தால் நான் நின்றுவிடுவேன் என துடித்துக்கொண்டிருந்த இதயமும் தான் என் உடலின் உயிர் இன்னமும் ஊசலாடுவதை உணர்த்திக் கொண்டிருந்தது

இப்போது கையில் அகப்பட்ட தம் உடமைகளை தூக்கிக் கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவனாய் மாறியிருந்தேன்
பாதுகாப்பு அரணாய் இருந்த கண்ணிவெடி புதைத்துக்கிடந்த உயர்ந்த அணைக்கட்டை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்
கால்களில் மிதிபடுகிறது உயிரற்றுக்கிடந்த உடல்கள்
நீர் நிரம்பிய குழிகளில் மிதக்கிறது உடல்கள் அது சிலவேளை ஓடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவனின் உடன்பிறப்பாய் கூட இருக்கலாம்
சிதறிக்கிடக்கிறது எம் உறவுகளின் உடல் கள்.

இன்னும் பத்துக்கால்கள் வைத்தால் வந்துவிடும் பாதுகாப்புஅணைக்கட்டு என்று இருந்த நிலையில் தான் ஓர் சத்தம் முன்னால் அணைக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தவனின் ஓர் கால் கண்ணிவெடியில் அகப்பட்டு தொடைப்பகுதியோடு சிதறிப்போகுறது
தூங்கும் குழந்தை திடீரென பதறி இயல்பாவதைப் போல் சீரான வேகத்தில் செல்லும் வாகனம் வேகம் மாறுபட நிலைதடுமாறி மீள்வதைப் போல் நானும் ஓடிக் கொண்டிருந்தேன்
இப்போது அணைக்கட்டு மீது ஏறிக்கொண்டிருக்கும் என் கால்களுக்கும் ஏதோ ஓர் கண்ணிவெடி காத்திருக்கும் என நிட்சயம் எனக்கும் தெரியும் கோவில் திருவிழாவிலே தீ மிதிப்பவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனின் மனநிலையே என் பின்னால் அணைமீது ஏறிக்கொண்டிருந்தவனுக்கு இருந்திருக்கும்
அடுத்து நான் கடக்க வேண்டியது அணைக்கட்டு அருகில் நீண்டிருந்த நீர் நிரம்பிக்கிடந்த அகழியை
வீழ்கிறேன் அதனுள்
தலையை மூடிவிடும் அளவுக்கு ஆழம் என்பது அப்போதுதான் உணர்கிறேன்
கால்களை நகர்த்த முடியாத அளவுக்கு சேறும் நிறைந்திருக்கிறது
அப்போதுதான் உதவிக்கு ஓர் கரம் நீள்கிறது இதுவரை முகமறிந்திராத ஓர் அக்காவின் கரம்தான் அது
சிலவேளை செத்துப்போன அவாவின் தம்பி முகம் கூட என்னில் தெரிந்திருக்கலாம் சேற்றுக்குள்ளே புதையுண்டு செத்துப் போக இருந்த எனக்கு உயிர் கொடுத்தார்
இன்னும் இன்னும் அலையலையாய் ஓடி வந்து கொண்டிருந்தார்கள் மக்கள்
நீண்ட வரிசையாய் முன்னோக்கி சென்று கொண்டிருந்தோம்
இரண்டு நாளாய் உணவின்றி எமக்கான சோதனைகள் நடந்து கொண்டிருந்தது
பின் பேரூந்தில் ஏற்றப்பட்டு ஓமந்தை சோதனைச்சாவடியில் இறக்கப்பட்டோம்
உறவுகள் இழந்து உடமைகள் இழந்து வந்த எமக்கான சோதனைகள் இங்கும் பல மணித்தியாலங்களாக நடந்து கொண்டிருந்தது தெருவில் ஓர் வாகனத்தில் இருந்து உணவுப் பொட்டலங்களை வீசியெறிந்து கொண்டிருந்தார்கள் சீனப்பெருஞ்சுவர் கூட தோற்றுப்போகும் அளவுக்கு உணவுக்காய் காத்திருந்த நீண்டிருந்த எம்மக்கள் வரிசை முன்னால்,
நிலத்தில் வீழ்ந்து சிதறிய உணவைக் கூட பசியில் அள்ளித் தின்றவர்களும் நாம்தான்
சிங்களத்து கெட்ட வார்த்தைகளும் எம்மீது பிரயோகிக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது
அடுத்த நாளின் காலைவேளை எமக்கான சோதனைகள் முடிந்து மீண்டும் பேரூந்தில் ஏற்றப்படுகிறோம்.

எங்குதான் கொண்டு செல்கிறார்களோ?
தெரியவில்லை என்ற ஏக்கத்தோடு ஐன்னலோர இருக்கையை பிடித்த என்
அடிவயிறு பசியில் பற்றி எரிகிறது
ஒரு துண்டு கிறீம் கிறேக்கர் விசுக்கோத்தும் தண்ணியும் இரண்டு நாள் பசியை எப்படித்தான் தாக்குப்பிடிக்கும்
“அவன் பசி தாங்கமாட்டான்” எனக்கூறி சாமிக்கு படைக்கும் முன் பிரசாதத்தை எடுத்து நீட்டும் என் அம்மாவும் அருகில் இருந்தார்
பேருந்துப்பயணம் தொடங்கிற்று
ஜன்னல் ஓரத்தில் வீசிக்கொண்டிருந்த காற்று எனக்கு சிலிர்ப்பாய்தான் இருந்தது
நான் தானே பல நாட்களாய் கந்தவாசனையும் இரத்தவாடையும் நுகர்ந்து பழக்கமாகிப்போனவன்
சுற்றி இருந்த இருக்கையை நிறைத்த அனைவர் முகங்களிலும் எதோ ஒன்றை இழந்ததன் வேதனை இழையோடியிருந்து
வவுனியா நகரத்தினுள் பேருந்து நுழைந்தது
பல நாட்களாய் பதுங்குகுழியின் சுவரை பார்த்துப்பழக்கமாகிப்போன எனக்கு நகரத்து தொடர்கடைகள் எல்லாம் ஆச்சரியமாய்த்தான் இருந்தது, எம் பேருந்திலும் இரண்டு சிப்பாய்கள் துப்பாக்கி ஏந்தி எம்மை கண்காணித்தபடியே இருந்தார்கள் அவர்கள் இன்னும் நம்பவில்லை போல…..
தொடர்ந்து மெல்ல நகர்ந்த பேருந்து மன்னார் வீதியின் ஓரத்தில் தகரக் கொட்டில்கள் அடுக்காய் இருந்த செட்டிகுளத்தில் நின்றது…………
-பிரகாஷ்