விடுதலைபுலிகள் மீதான தடையை இந்தியாவிலும் நீக்க வேண்டும்!

0
149

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது போன்று இந்தியாவிலும் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் இந்திய மத்திய அரசை வலியுறுத்தினர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது செயல்படுத்தப்பட்டு வந்த தடை நீக்கப்படும். இது வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியா தான். விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் இந்தியாவுக்கும் பொருந்தும். எனவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 26 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், உதவியதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் ஜூலை 26ஆம் தேதி தந்திருக்கின்ற தீர்ப்பு இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட தமிழ் ஈழ வரலாற்றில் உன்னதமான திருப்பத்தைத் தந்து இருக்கிற தீர்ப்பாகும்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்த கொடூரக் குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம்; சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பையும் நடத்தலாம் என்ற நம்பிக்கையை லக்சம்பர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பு தந்து இருக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தீர்ப்பை பின்பற்றி இந்தியாவிலும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here