யேர்மனில் நடைபெற்ற போராட்டமும் பிரித்தானியா தூதரகத்திற்கு தமிழர் தரப்பால் கையளிக்கப்பட்ட மனுவும்!

0
88

2009ம் ஆண்டு மே மாதம் 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், சிங்கள தேசத்தின் 76வது சுதந்திரதினம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 76 ஆண்டுகால துயர் சுமந்த அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாள் ஆகும். 

இரண்டு தேசிய இனங்கள் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதனை மறந்து இன அடக்கமுறையின் ஒரு வெளிப்பாடாக தொடர்ந்து சிறிலங்கா இனவாத அரசால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

சிங்கள பேரினவாத அரசின் 76 வது சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் முகமாக யேர்மன் தலைநகரில் பிரித்தானியா தூதரகத்தின் முன்னால் கடும் குளிர் மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழின உணர்வாளர்கள் ஒன்றுகூடி அடையாள கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்டனர்.

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி சர்வதேச முற்சந்தியில் பாரிய பதாதைகளை ஏந்திய வண்ணம் துண்டுப்பிரசுரங்களை யேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் வேற்றின மக்களுக்கு விநியோகித்தனர். கடும் குளிரையும் பாராமல் இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்கள் பல்வேறு நகரங்களிலும் இருந்தும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.தாயகத்தில் எமது மக்களின் போராட்டத்திற்கும் , பிரித்தானியாவில் நடைபெற்ற பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக இப்போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது.

எமது தாயகம் பேரினவாத சிங்கள அரசின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு, தமிழ் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், எம்தேச விடுதலையை வென்றெடுப்பதில், ஒவ்வொரு ஈழத்தமிழரும் உறுதியாக உள்ளோம் என்பதனை நல்லிணக்கம் என்ற பசுத்தோலைப் போர்த்திய சிறீலங்கா பயங்கரவாத அரசிற்கும், இனவழிப்பிற்கு ஒத்தாசையாக இருந்த சர்வதேசத்திற்கும் நாம் ஒன்றுபட்டு இவ்வாறான போராட்டங்களின் ஊடாக இடித்துரைப்போம். புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களும் ஒன்றிணைந்து தத்தம் நாடுகளில் நடைபெறுகின்ற இப்படியான நிகழ்வுகளிற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று மேலும் வலுச்சேர்க்க வேண்டுமெனவும்
இத் தருணத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வின் இறுதியில் பிரித்தானியா தூதரகத்திற்கு மனு கையளிக்கப்பட்டு  “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்…” நம்பிக்கை பாடலுடன் இக் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here