
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போர் நாளாந்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாலியல் ரீதியான வன்முறைகளை ஹமாஸ் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக இஸ்ரேலிய சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கான போருக்கு மத்தியில், பல பெண்கள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகளின் மூலம் தெளிவாகியுள்ளதாக பேராசிரியரும் சட்டத்தரணியுமான ரூத் ஹல்பெரின் – கடாரி தெரிவித்துள்ளார். இதனை எந்த சந்தேகமுமின்றி உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வாக்குமூலங்கள்
ஹமாஸின் தாக்குதல்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக புதர்களில் மறைந்து இருந்தவர்கள், ஏனைய பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதை நேரில் பார்த்தமை தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தியதாக ரூத் ஹல்பெரின்-கடாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் மருத்துவர்களிடம் இது தொடர்பான வாக்குமூலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸின் வன்முறைகள்
அத்துடன், கூட்டு பலாத்காரம் காரணமாக உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல், ஹமாஸின் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பான கூற்றுக்களை ஒப்புக் கொள்ள சில ஐ.நா அமைப்புகள் தவறியுள்ளமை தம்மை கோபப்படுத்துவதாகவும் ரூத் ஹல்பெரின்-கடாரி கூறியுள்ளார்.
எனினும், பெண்கள் தமது இயக்கத்தால் பாலியல் ரீதியில் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதை ஹமாஸ் இயக்கம் நிராகரித்துள்ளது.