பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டவாறு இடம்பெறும் – கஜேந்திரன்

0
328

kajenranஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் ஹர்த்தால் திட்டமிட்டவாறு வெள்ளிக்கிழமை இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டவாறு இடம்பெறும் அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும்;. பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு அரசு முயல்கின்றது.
விடுதலையின்றி சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தாம் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்ற அழுத்தத்தினை சிறீலங்கா அரசு மீது ஏற்படுத்தவும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பானது திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை(13-11-2015) இடம்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். இப்போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புக்களதும் ஆதரவினை கோரிநிற்கின்றோம்.
குறித்த தினத்தில் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் மூடியும், போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் முழுமையான இயல்பு நிலை தவிர்ப்பை கடைப்பிடிக்குமாறு கோருகின்றோம்.
இப்போராட்டத்தின்போது எவரும் வன்முறையில் ஈடுபடவோ, வன்முறைக்கு இடமளிக்கவோ கூடாது எனக் கோருவதுடன், மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கபடக்கூடாதென்பதுடன், பொது அமைதியை பேணும் வகையில் அனைவரையும் செயற்படுமாறும் கோருகின்றோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here