
செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற தேர்தலிலும் இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்குகளை வழங்கினர். அடிப்படை மனித உரிமைகளை புதிய அரசாங்கம் மதிக்கும் என எம் மக்கள் நம்பினர். அதுமட்டுமின்றி நீண்ட காலம் எந்தவொரு விசாரணையின்றி சிறையில் வாழும் தமிழ் கைதிகளை விடுவிக்கவும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் மக்களின் காணிகளில் தமிழ் மக்களை மீண்டும் குடியேற்றும் எனவும் நம்பினர்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய புதிய ஆட்சியாளர்கள் இன்று தமிழ் மக்களை புறக்கணித்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மக்கள் எதிர் பார்த்தவாறு எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மீண்டும் மீறப்பட்டன புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு தீர்வையும் ஆண்டு ஒன்று நிறைவடையும் இந் நேரம் வரை வழங்காமை மிகவும் கவலைக்குரியதாகின்றது. நீண்ட காலம் சிறையில் விசாரணையின்றி வாடும் இளைஞர்களை விடுவிக்க இயலாமல் இருக்கும் ஒரு அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று எப்படி கூற முடியும்?
தற்போதைய நிலையில் அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன் வரவேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதன் மூலமே தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என நாம் கருதுகின்றோம்.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களுக்குள்ளாகிய தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக வழியில் தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி எமது உரிமையை பெறவேண்டிய நிலமைக்கே தள்ளப்பட்டுள்ளோம்.
அனைத்து தரப்பு தமிழ் மக்களும் இணைந்து அரசாங்கத்தின் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில் செயல்பட வேண்டும். இதன் பொருட்டு எமது மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டவாறு (13.11.2015) வெள்ளிக்கிழமை நடைபெறும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் யாழ் வணிகர் கழகமும் அதன் பூரண ஆதரவை நல்குவதென நிர்வாகசபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எனவே அன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டவாறு பூரண ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வர்த்தக பெருமக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் ஹர்த்தால் நடவடிக்கைகளை பூரண அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொள்கின்றது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.