இத்தாலிய சட்டத்துறை பட்டத்தினை பெற்றுக் கொண்ட தமிழீழப் பெண்!

0
866

இத்தாலிய நீதித்துறை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலமாக
சட்டத்துறை படிப்பின் பட்டத்தினை பெற்றுக் கொண்ட தமிழீழ பெண் செல்வி சரண்யா தவராஜசிங்கம் அவர்களை தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
இத்தாலி நாட்டில் தாறந்தோ மாநகரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் 15.06.2023 அன்று காலை நேரம் இத்தாலி நீதிப்பேராசிரியர்கள் அறுவர் முன்னிலையில் தனது சட்டத்துறையின் உயர் நிலைப் படிப்பிற்கான அங்கீகாரமான பட்டத்தினை செல்வி சரண்யா தவராஜசிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தன்னுடைய சட்டத்துறையின் தேடல்களையும், ஒரு குமுகாயத்தில் அது எவ்வாறு பயனளிக்கும் என்ற அவரின் ஆய்வின் சுருக்கத்தினை நீதிப்பேராசிரியர்கள் முன் ஒப்புவித்து பட்டயத்தையும், அங்கீகாரத்தையும் மண்டபத்தில் நிறைந்திருந்த பல நூறு இத்தாலி மக்களின் கரகோசத்துக்கு மத்தியில் பெற்றிருந்தார். இவருடன் மேலும் சில இத்தாலியர்களும் பட்டத்தினை பெற்றிருந்தனர்.


இத்தாலி நாட்டிலே சட்டத்துறையில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ஒரேயொரு ஈழத்துப் பெண்ணாக செல்வி சரண்யா தவராஜசிங்கம் அவர்களே விளங்குகின்றார் என்பதுடன், இவர் இத்தாலி நாட்டில் பலெர்மோ நகரிலே பிறந்து இத்தாலி கல்வியுடன், திலீபன் தமிழ்ச்சோலையில் தமிழும், மாலதி கலைப்பள்ளியில் நடனமும் கற்றதோடு தாயகத்தின் உண்மைக்காகவும், சுதந்திரத்திற்காகவும், சுபீட்சமான வாழ்வு எமது இனத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல், சனநாயக பாதையில் இளையோர்களுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் பெற்றோர் சிறிய வயது முதல் காட்டிய மொழிப்பற்று, பண்பாடு, கலாசாரம் என்பன இவரை ஓர் உன்னத தமிழ்ப்பிள்ளையாகவும், தமிழைத் சரளமாகப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் கூடியவராகவும் இன்றுவரை பயணிக்க வைத்துள்ளது. தற்பொழுது தனது எதிர்கால கனவிற்காக ஏனைய ஐரோப்பிய மொழியையும் கற்று வரும் இவர், தமிழ்மக்கள் மட்டுமல்ல இத்தாலிய மக்களும் விரும்புகின்ற தமிழ்ப் பிரசையாக வாழும் செல்வி சரண்யா தற்பொழுது தான் பெற்றுக்கொண்ட சட்ட அங்கீகாரத்துடன் தனது உன்னதமான பணியை பிறந்து, வாழும் இத்தாலி நாட்டிற்கும், தனது தாயின் நாட்டிற்கும் செய்வார் என்றே தமிழுலகம் மிகுந்த நம்பிக்கை கொள்கின்றது. அவருக்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


“ உலகமெங்கும் அங்காங்கே சிதறிக்கிடக்கும் எமது அக்கினிக் குஞ்சுகள் ஒருநாள் ஒன்றாகி உலகிற்கும் ஒளிதருவதோடு தம் இனத்தையும் ஒளிரச்செய்வார்கள் என்ற நம்பிக்கையே ஏற்படுகின்றது.’’
(நன்றி: செய்தியாளர் – இத்தாலி).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here