ஐ.நா மனித உரிமைகள் ஆணை யாளரின் விசாரணை அறிக்கையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை விசாரிப்பதற்காகவே தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் அமைப்பதற்கு இணங்கியிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார்.
தேசிய பொறிமுறையின் மூலம் விசாரணை நடத்தி உண்மைய கண்டறிந்த பின்னர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகளை தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தேசிய பொறிமுறைக்குப் பயப்படத் தேவையில்லை. தருஸ்மான் அறிக்கை உள்ளிட்ட சர்வதேச விசாரணை அறிக்கையில் உள்ள பிழைகளை எமது தேசிய விசாரணை முடிவுகள் மூலம் சுட்டிக்காட்டு வதற்கு நமக்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
உடலாகம அறிக்கை மற்றும் பரணகம அறிக்கைகள் மூலம் நாட்டில் ஏற்பட்ட உண்மை நிலைமைகளை வெளிக்கொணர முடிந்துள்ளது.
இதுபோன்றே தேசிய பொறிமுறையின் மூலம் மேலும் பல உண்மைகளை எம் மால் வெளிப்படுத்த முடியும். அதேநேரம், எந்வொரு விசாரணையாக இருந்தாலும் அது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என நாம் தெளிவான நிலைப் பாட்டில் இருக்கின்றோம் என தெரிவித்தார்.