பிரான்சு இவ்றி சூர் சென் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவும் பொங்கல் நிகழ்வும்!

0
245


பிரான்சு 94 மாவட்டம் இவ்றி சுர் சென் பிராங்கோ தமிழ்ச்சங்கம் தனது 27 ஆவது ஆண்டு விழாவும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வும் Robes Salleierre மண்டபத்தில் நேற்று 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை 11.00 மணிக்கு மண்டப வாசலில் பெரியவர்கள் மாணவர் , சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் தமிழர் கட்டமைப்பு பொறுப்பாளர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகர முதல்வர் Plilippe BOUYSSOU அவர்களும் மற்றும் அனைத்து வெளிநாட்டு சங்கங்களின் பொறுப்பாக இருப்பவரும் வந்து கலந்து கொண்டதோடு பொங்கல் பானையை அடுப்பில் வைத்ததோடு அதில் அரிசியும் இட்டு பொங்கல் செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாநகர முதல்வர் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீசுவரன், மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மண்டபத்திற்கு மாணவர்களின் வரவேற்புடன் அழைத்து வரப்பட்டனர். அகவணக்கம் இடம் பெற்றதோடு மங்கல விளக்குகளையும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் மாணவர்கள் ஆசிரியர்களால் பாடப்பட்டது. வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், பொங்கல் கோலாட்டம் இடம் பெற்றன. சிறப்பு விருந்தினர்களான முதல்வர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் உரைகளை ஆற்றியிருந்தனர். முதல்வர் தனது உரையில் உணவும், சுற்றுப்புறச்சூழலும் மிகவும் முக்கியம் என்றும் உணவுக்கு உதவும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் தமிழர்களின் பண்பாட்டை தான் மிகவும் விரும்புவதாகவும் அது மதிக்கப்பட வேண்டிய விடயம் என்றும் கூறியிருந்தார். பரப்புரைப் பொறுப்பாளர் உரையாற்றும் போது இவிறி தமிழ்ச்சங்கத்தின் 27 வருடகாலப் பயணம் சங்கத்தை வீழ்ந்து விடாது தொடர்ந்து நடாத்திச் செல்வதும் இங்கு கல்விகற்ற பழையமாணவர்கள் தொடர்ந்து பிராங்கோ தமிழ்ச்சங்கத்தை வளர்த்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவேண்டும். இதற்கு இளையவர்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் ஆசிரியர்களையும், நிர்வாகத்தையும், பெற்றோர்களையும் பாராட்டியிருந்தார்.
தொடர்ந்து இவிறி தமிழ்ச்சோலையின் பழைய மாணவியின் ஆக்கத்தில் வேலுநாச்சியார் நாடகம் இடம்பெற்றது. தொடர்ந்து வில்லுப்பாட்டு, இராவணன் பெருமைகள் நாடகம், காவடிசிந்து நடனம், எழுச்சி நடனம், சங்கீதம், போன்ற கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

ஆசிரியர் மதிப்பளித்து வைக்கப்பட்டனர். மதிப்பளித்தலைத் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் செய்திருந்தார். விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரினை பரப்புரைப் பொறுப்பாளர், மற்றும் சங்க உறுப்பினர்களும் பெற்றுக்கொண்டனர். விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இனிய பொங்கல் உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது. மண்டபம் நிறைந்த பெற்றோர், குழந்தைகள், பொதுமக்கள், பிரெஞ்சு மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் 27 ஆவது ஆண்டு நிகழ்வும், பொங்கல் நிகழ்வும் நிறைவுபெற்றது.


(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here