முக்கிய பகுதிகளை மீட்ட உக்ரைன் – ரஷ்ய துருப்புகள் பின்னகர்வு!

0
270
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் வசமிருந்த பகுதிகளை தமது படையினர் துரிதமாக கைப்பற்றி வருவதாக உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 02 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவை தமது படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ரஷ்யபடையினருக்கு பின்னடைவு ஏற்பட்டுவருவதாக கூறப்படும் நிலையில், குறுகிய காலப்பகுதிக்குள் அதிகமான பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2 ஆயிரம் சது கிலோமீற்றர் பரப்பளவை தாம் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் கூறும் தரவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிகளை உக்ரைன் படையினர் கைப்பற்றியமை உறுதி செய்யப்படும்.
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் துரிதமாக முன்னேறிவரும் உக்ரைன் படையினர், இசியம் மற்றும் குப்பியன்ஸ்க் நகரங்களை கைப்பற்றியிருந்தனர். எனினும் குறித்த நகரங்களுக்கு வெளியே மோதல்கள் தொடர்வதாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இசியம் நகரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தமது படையினர் போராடி வருவதாக கீவ்வில் உள்ள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கெர்க்கீவ் பிராந்தியத்திலுள்ள 30 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மயிரிழையில் தப்பிய ஐரோப்பா – உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்
தமது படையினரை மீள ஒருங்கிணைக்கும் வகையில் இசியம் மற்றும் குப்பியன்ஸ்க் ஆகிய நகரங்களில் இருந்து பின்வாங்கியுள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.
டொனெட்ஸ்க் போர்முனையை பலப்படுத்தும் வகையில் மூன்றாவது முக்கிய நகரமான பலாக்லியாவில் இருந்தும் தமது படையினரை திரும்பப் பெற்றுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here