பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

0
330


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 05.07.2022 செவ்வாய்க்கிழமை பொபினிப் பகுதியில் பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருகிணைப்புக்குழு பிரதம செயற்பாட்டாளர் திரு.செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.


கரும்புலிகள் பொது உருவப்படம், கரும்புலி கப்டன் மில்லர், கடற்கரும்புலி கப்டன் அங்கயர்க்கண்ணி உள்ளிட்ட தற்கொடையாளர்களின் திருஉருவப் படங்களிற்கான ஈகைச் சுடர்களை
13.01.1994 அன்று பருத்தித்துறையில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் சுதாயினி அவர்களின் தாயார்
20.06.1999 அன்று யாழ்.கொக்குவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரர்
26.07.2008 அன்று யாழ்.முகமாலைப் பகுதியில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை மயூரன் அவர்களின் சகோதரர்
02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த 2-ம் லெப். காண்டீபன் அவர்களின் சகோதரர்
1988 இல் நாவற்குளியில் இந்திய இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் பரதா அவர்களின் சகோதரர்
புலோப்பளையில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்.பக்கி அவர்களின் சகோதரர்
வீரவேங்கை நிலவன் அவர்களின் சகோதரி ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; அணிவகுத்து சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
புளோமினில் தமிழ்ச்சோலை மாணவர்களின் கரும்புலிகள் நினைவுசுமந்த எழுச்சி நடனத்தோடு அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின.
புளோமினில் தமிழ்சசோலை மாணவி செல்வி ஜெயரூபன் துளசி, லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை மாணவன் செல்வன் அகிலன் அஸ்வின், லாக்கூர்நோவ் தமிழ்ச்சோலை மாணவி செல்வி அஸ்வனா மற்றும் பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி யசோ ஆகியோரின் கரும்புலிகள் நினைவு சுமந்த கவிதைகள் சிறப்பாக அமைந்திருந்தன.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிகானங்கள் நிகழ்வை மேலும் உணர்வூட்டிச் சிறப்பித்திருந்தன. இசையை வழங்கி மெருகூட்டிய கலைஞர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான தற்காப்புக் கலையான சிலம்புக்கலையினை கலைஞர் திரு.இந்திரன் அவர்களும் அவருடைய புதல்வியும் ஆற்றுகைப்படுத்தியிருந்தமை அனைவரையும் கவர்ந்திருந்தது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உரையாற்றிய பரப்புரைப்; பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் கரும்புலிகளின் தியாகங்களை நினைவுபடுத்தியிருந்ததுடன், இவ்வாறான நிகழ்வுகளில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்ததுடன, கடந்தமாதம் பெல்சியம் எழுச்சி நிகழ்வில் காலத்தின் தேவையறிந்து கலந்துகொள்ள பிரான்சில் இருந்து சென்றவர்களுக்கு நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வினை அறிவிப்பாளர் திரு.கிருஸ்ணா அவர்கள் அழகு தமிழில் உணர்வோடு சிறப்பாகக் கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here