குடிநீருக்காக பனியை உருக்கி சமாளித்தோம்: உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவியின் திகில் அனுபவம்!

0
125

‘உக்ரைன் போரின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, குடிநீர் இல்லாததால், பனியை உருக செய்த நீரை, ஐந்து நாட்கள் குடித்து சமாளித்தோம்’ என, காஞ்சிபுரத்திற்கு திரும்பிய மருத்துவ மாணவி ஒருவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், பல்லவன் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் மகள் சொப்னா, 22, இவர் 2016இல் மருத்துவப் படிப்புக்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்றார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும்போரில் சிக்கிய சொப்னா மத்திய, மாநில அரசின் உதவியால், கடந்த 12இல் காஞ்சிபுரம் வந்தார். போரில் சிக்கிய அனுபவம் குறித்து, மாணவி சொப்னா கூறியதாவது:
உக்ரைனின் சுமி மாகாணத்தில், சுமி பல்கலைக்கழகத்தில், 6ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். 11 இறுதியாண்டு தமிழக மாணவர்களும், 30 இந்திய மாணவர்களும், பல்கலைக்கு மிக அருகில் விடுதியில் தங்கியிருந்தோம்.

போர் நடந்த நாள் முதல், இராணுவ நடமாட்டம் அதிகம் இருந்தது. மார்ச் 3ல், எங்கள் விடுதிக்கு அருகில் உள்ள துணை மின் நிலையம், ரஷ்ய இராணுவத்தின் குண்டுகளால் தாக்கப்பட்டது.அன்று முதல் எங்களுக்கு மின்சாரம், ஹீட்டர் இல்லை; இணைய இணைப்பு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் தவித்தோம்.

தண்ணீருக்காக பனியை உருகச்செய்து, 5 நாட்கள் சமாளித்தோம். சாப்பாடு இல்லை, போர் துவங்கும் முன் வாங்கிய பொருட்களை வைத்து சமாளித்தோம்.உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக கீவியில் உள்ள இந்திய துாதரகத்தை தினமும் தொடர்பு கொண்டோம். ஆனால், சுமிக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் சேதமடைந்ததால், உதவி கிடைக்கவில்லை; சுமியை விட்டு வெளியேற வழியில்லை.

நாளாக ஆக குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு சத்தம் அதிகரித்தது; பயத்தில் பதுங்கு குழியில் இருந்து வெளியே நகரவில்லை. எங்களின் பாதுகாவலரான ஒப்பந்ததாரர் ரெனிஷ் ஜோசப், நிறைய உதவினார். மார்ச் 7இல், போர் நிறுத்த உத்தரவுடன் வெளியேற்றப்படுவோம் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து ஏற்பாடுகளும் தயாரான பின், மாணவர்கள் அனைவரும் பஸ்சில் அமர்ந்து பயணத்தைத் துவங்க இருந்தோம். திடீரென எங்கள் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. உடனே பயணம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பதுங்கு குழிக்குத் திரும்பினோம்.
அப்போது, எங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தால், நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது; எதிர்காலம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தோம். ஆனால், அந்த சூழலுக்கேற்ப மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், அடுத்த நாளே, சுமியில் இருந்து வெற்றிகரமாக வெளியேறினோம்.
சுமியில் இருந்து வெளியேற்றுவதற்காக மொத்தம், 24 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக, 120 கி.மீ., துாரத்தை 12 மணி நேரம் பயணித்து பொல்டோவை அடைந்தோம். பொல்டோவாவில் இருந்து போலந்து நாட்டுக்கு பயணிக்க ஆரம்பித்தோம்.
மார்ச் 10இல், இரவு 11:45 மணிக்கு, இந்திய இராணுவ விமானம் ‘சி 17’ல் இந்தியாவுக்கு பயணித்தோம். டில்லியில் இருந்து சென்னை வந்து, அவரவர் வீட்டிற்கு பத்திரமாக சென்றோம். நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவிய பிரதமருக்கும், முதல்வருக்கும், வெளியுறவு அமைச்சகத்திற்கும், காஞ்சிபுரம் கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் மிக்க நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி: தினமலர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here