யாழ்.புங்குடுதீவில் ஆலய பூசகர் அடித்துப் படுகொலை!

0
969

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் ஆலய பூசகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இன்று (03) அதிகாலை இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் ஆலய பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், காவல்துறையினருக்கு தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பூசகரின் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, புங்குடுதீவு – ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினரும் யாழ்ப்பாணம் தடயவியல் காவல்துறையினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கொலையில் ஈடுபட்டவர்கள் சிசிரிவி கமராக்களை புடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் என்பவர் காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய மேலும் இரு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூவரும் ஊர்காவற்றுறை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், பூசகரின் உதவியாளரால் அழைத்து வரப்பட்டு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here