உயிராயுதம் ஏந்தியவனின் உண்மைக் கதை! – ‘திலீபன்’ இயக்குநர் ஆனந்த மூர்த்தி நேர்காணல்

0
363

thileepan filmவிடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம்.

திலீபனைத் தெரியும். அந்தத் திலீபனைத் திரையில் காட்டப்போகும் ஆனந்த மூர்த்தியின் பின்னணி..?

நான் பெங்களூருவில் பிறந்த தமிழன். அங்கே ஓவியம் படித்துவிட்டு, இயக்குநர் கதிரிடம் ‘காதல் தேசம்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களிலும், இயக்குநர் அமீரிடம் ‘ஆதிபகவன்’ படத்திலும், இயக்குநர் பாலாவிடம் ‘பரதேசி’யிலும் பணிபுரிந்தேன். ‘திலீபன்’ எனது முதல் படம்.

பொதுவாக, சினிமா வாழ்க்கையை நிர்ணயிப்பது முதல் வெற்றி. அந்த முதல் வெற்றியை எளிதாகப் பெறுவதற்காக கமர்ஷியல் பக்கம் ஒதுங்குவது அறிமுக இயக்குநர்கள் பலரது உத்தி. இதிலிருந்து விலகி நிற்பதற்கு எது நம்பிக்கையைத் தந்தது?

ஒவ்வொரு இயக்குநரும் தனது முதல் படம் வணிகரீதியான படமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். திலீபனும் அப்படியொரு படம் தான். படம் வெளியாகும்போது அது தெரியும். கமர்ஷியல் படம் எடுப்பது எளிது ஆனால் நான் ஒரு இயக்குநராக எனது திறமையை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். கமர்ஷியல் கதைகள் சிலவற்றை எழுதினேன். எனக்கு விருதுகள் தேடித் தந்து, என் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைத் தேடித் தரும் படத்தை நான் எடுக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் எனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொள்ள நினைத்தேன். மதுரை தமிழர்கள், ராமநாதபுரம் தமிழர்கள், கோவை தமிழர்கள் என உலகிலுள்ள அனைத்து வகையான தமிழர்களைப் பற்றியும் படம் எடுக்க நம்மிடம் இயக்குநர்கள் உள்ளனர். ஈழத் தமிழர்களைத் தவிர. அவர்களது விடுதலைப் போராட்டம் என்னை பாதித்தது.

நமது நாட்டுக்கு அருகிலேயே சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் சரித்திரம் இங்கே இருப்பவர்கள் எவரையும் பாதிக்கவில்லை. ஆனால் அது பிரெஞ்சு இயக்குநர் ஒருவரை பாதித்து அவரை ‘தீபன்’ போன்ற ஒரு படத்தை எடுக்க வைத்து கேன்ஸில் வெற்றி பெறச் செய்துள்ளது. இனி ஈழத்து கதைகளை பல இயக்குநர்கள் திரைப்படமாக எடுக்க முன்வருவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

திலீபனைத் திரையில் காட்டும் எண்ணம் உதித்தது எப்போது? அந்தத் திட்டத்துக்காக இதுவரை கடந்து வந்த பாதை எத்தகையது?

சிறுவயதில் தினமும் தமிழ் தினசரிகளை வீட்டில் வாசிப்பதுண்டு. அதன் மூலமாக தமிழ் கற்போம். அப்போது திலீபனின் வாழ்க்கையைப் பற்றி தினமும் வெளிவந்து கொண்டிருந்தது. அப்போதே அவர் என் மனதில் ஒட்டிக் கொண்டார். நான் சினிமா துறைக்கு வந்து திரைப்படம் எடுக்கலாம் என்ற நிலைக்கு வந்தேன். அப்போது என் மனதிலுள்ள கதைகளை அசைபோட்டேன். ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி யாரும் படம் எடுக்கவில்லை என்பது உரைத்தது. உடனே திலீபன் என் நினைவுக்கு வந்தார். அவரை பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் எல்லாம் ஆரம்பித்தது. அவரது தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு தெரிந்திருக்கும். அவர் எப்படி இறந்தார் என்று தெரிந்திருக்கும். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் திரைக்கதை எழுதவதே எனக்கு சவாலாக இருந்தது.

திரைக்கதை எழுதும்போது மலைப்பாக இருந்தது. அனைத்தும் எளிதாக முடிந்தது. எழுதி முடித்தவுடன் இதுவரை பார்த்திராத ஒரு நாயகனைப் பற்றிய திரைக்கதையாக அது இருந்தது. கண்டிப்பாக இந்தத் திரைப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். எழுச்சி பெறும் நாயகன், அவனது இறப்பு என விடுதலைப் புலிகளுக்காகவும், தமிழர்களுக்காகவும் மாண்ட நாயகன் ஒருவனின் கதையாக இது இருக்கும்.

திலீபனின் வாழ்க்கையை திரைமொழியில் மக்களுக்குச் சொல்ல வேண்டியதன் இப்போதைய அவசியம் என்ன?

சுதந்திரத்துக்காக போராடும் விதம் தான் மாறியுள்ளது. ஆனால் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திலீபனின் வாழ்க்கை வரப்போகும் தலைமுறைகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

எதை சினிமாவாக்க வேண்டும் என்பது ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், நீங்கள் எடுத்திருக்கும் களம் இலங்கைத் தமிழர் பிரச்சினை. தற்போதையச் சூழலில், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாகவும், அவர்களை எப்படி அணுக வேண்டும் என்று தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டிய காலக்கட்டத்தில், திலீபன் போன்றோரின் வாழ்க்கையை நினைவூட்டுவது தொடர்புடைய தமிழர்களுக்கு ஒரு வித உளவியல் சிக்கலை ஏற்படுத்தி விடாதா?

இது அவர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றுப் பயணத்தைச் சொல்லும் நிறைவான, நேர்மறையான படமாக இருக்கும். கண்டிப்பாக இது அவர்களை மகிழ்விக்கும். தாங்கள் நாயகனாக நினைக்கும் ஒருவரைப் பற்றிய படம் வெளிவருவது குறித்து உலகம் முழுவதிலுமிருந்து பலர் என்னை அழைத்துப் பேசி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழன், பாரதியார் பற்றிய படங்களைப் பார்க்கும்போது நம் அனைவருக்கும் அவர்களை நினைத்து பெருமையாகத் தான் இருந்ததே தவிர நாம் யாரும் ஏன் அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது என யோசிக்கவில்லை.

அதாவது, புண்பட்டவர்களின் நெஞ்சங்களில் மேலும் துயரத்தைக் கடத்துவது போல் ஆகிவிடாதா?

எனது திரைப்படம், போராட்டத்தில் சக தமிழர்களை இழந்து, வடு ஆறாமல் வலியில் வாடுபவர்களுக்கு மருந்தாகத் தான் இருக்கும். திலீபன் திரைப்படத்தை தங்கள் மனங்களோடு அரவணைத்துக் கொள்வார்கள். அவர்களது இழப்புகளைப் பற்றி பெருமையாகப் பேச வேறு எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை.

திலீபன் படத்தை உருவாக்குவதற்காக அவ்வபோது இலங்கை சென்று வந்திருக்கிறீர்கள். அங்கு படப்பிடிப்பு நடத்தினீர்களா? எந்த மாதிரியான ஹோம் ஒர்க் எல்லாம் செய்தீர்கள்?

தீலிபன் வாழ்ந்தபோது வாழ்ந்த சிலரை சந்தித்துப் பேசினேன். அவர்களது வாழ்வியலை, கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்ள அங்கு சென்றேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையின் முழுத் தீவிரம் தெரியாமல் சினிமா பார்த்து வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு எந்த மாதிரியான சினிமா அனுபவமாக திலீபன் இருக்கும்?

எந்த இனமும் தங்களின் வரலாறு தெரியாமல் இருந்து செழித்ததில்லை. வரலாறு அனைவருக்கும் மிக முக்கியம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, தாங்கள் தமிழர்கள் என்று பெருமையாக அவர்கள் கம்பீர நடை போடவே இந்தப் படத்தை எடுத்துள்ளேன். தீலிபனிடம் அனைத்தும் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உந்துதலாக இருக்கும் நாயகனை அவர்கள் திரையில் காண்பர்கள்.

இந்தப் படத்தைப் பொருத்தவரை, வியக்கத்தக்க அம்சமாக இருப்பது காஸ்டிங். நந்தா… திலீபனாக மாறியது, விடுதலைப்புலித் தலைவர்கள் கதாபாத்திரங்கள் உருவானது குறித்தும், அதில் இருந்த சாதக – பாதகங்கள் பற்றி…

இந்தப் படத்தின் மிகப்பெரிய சொத்து இதற்கு முன் பல வெற்றிப் படங்களில் வேலை செய்த, விஐபி இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அடுத்து கதையைக் கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட்ட ஜி.வி பிரகாஷ். மேலும் எடிட்டர் கிஷோர், கலை இயக்குநர் ஜாக்கி ஆகியோரும் இதற்கு முன் பல பெரிய வெற்றிப் படங்களில் பணியாற்றியவர்களே.

நடிகர் நந்தாவை நான் 2001-ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவரிடம் திலீபனைப் பற்றிய படம் குறித்தும், அதில் நீங்கள் சரியாக பொருந்துவீர்கள் என்றும் கூறினேன். மேலும் தயாரிப்பாளர் கிடைத்தவுடன் அணுகுவதாகவும் சொன்னேன். அவர் நடிப்பதில் ஆர்வமாக இருந்தார். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பதாக இருந்தது. நந்தாவுக்கு இதனால் அளப்பற்ற மகிழ்ச்சி. ஆனால் அது நடக்காமல் போனது. தொடர்ந்து 2011- ஆ ஆண்டு வேறொரு தயாரிப்பாளரோடு ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேடத்தில் நடிக்க ஸ்ரீதர் சுப்பிரமணியன் கிடைத்தது சுவாரசியமான கதை. உண்மை கதாப்பத்திரங்களைப் போலவே முக ஜாடை உள்ளவர்களை தேடினோம். அப்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருந்த ஸ்ரீதரைப் பார்த்தபோது, இவர் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.

இந்தப் படத்தில் நடிக்க பல சிக்கல்களைத் தாண்டி நடிகர்களைத் தேடி, படத்துக்குத் தேவையான பொருட்களையும் தேடிப் பிடித்த என் உதவியாளர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். தாங்கள் பார்த்த அனைவரிடத்திலும் அவர்கள் பேசினார்கள். தேர்வு கடினமாக இருந்தாலும் கடைசியில் நாங்கள் நினைத்தது நடந்தது.

சென்சாரை எதிர்கொள்ள எப்படித் தயார்படுத்தி வைத்திருக்கிறீர்கள். இந்தப் படம், காங்கிரஸ் ஆட்சியின் முடிவுகள் தொடர்புடையது. தற்போது பிஜேபி ஆட்சி என்பதால், சென்சாரில் பச்சைக்கொடி காட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா?

திலீபனில் எந்த அரசியலும் பேசப்படவில்லை. ஒருவருடைய வாழ்வும் மற்றும் மறைவைப் பற்றிய படம் இது. அவர் தீவிரமான காந்தியவாதி. ஆனால் தந்தை செல்வாவின் அகிம்சை போரட்டம் தோல்வியில் முடிந்ததைப் பார்த்த பின்னர் ஆயுதங்களைக் கையில் எடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. இந்தியாவுடன் தொடர்பு ஏற்பட்ட போது, உலகுக்கு இந்தியா கற்றுத் தந்த இந்திய வழியிலேயே போராட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தார். விடுதலைப் புலிகளுக்கும், இந்திய ராணுவத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது திலீபனின் இறப்புக்கு பிறகுதான்.

எனது படம் திலீபனின் மறைவோடு முடியும். இலங்கைப் போரில் வேறு வழியின்றி ஆயுதங்களைக் கையிலெடுத்த ஒரு அகிம்சைவாதியைப் பற்றிய படம் இது. இந்திய ராணுவம் தான் திலீபனுக்கு பயிற்சி அளித்தது என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். காந்திய வழியை பின்பற்றும் இந்த தேசம் எங்கள் லட்சியத்தை அடைய உதவும். நவீன உலகில் அஹிம்சைக்கு இன்னமும் இடம் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.

திலீபன் படத்தை உருவாக்கும்போது கிடைத்த அனுபவங்களில் என்றுமே நினைவில் நிற்கக்கூடியவை…

ஒன்று இரண்டு என குறிப்பிட்டு சொல்ல முடியாத. அப்படியான நினைவுகள் நிறைய இருக்கின்றன. லண்டனில் இருந்து சிலர் சென்னை வந்திருந்தபோது எங்கள் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருவதைத் அறிந்து கொண்டனர். எங்கள் தளத்துக்கு வரவேண்டும் என விரும்பினர். அவர்கள் வந்திருந்தபோது நடிகர்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவராக நடிப்பவரை அறிமுகம் செய்தபோது, வந்திருந்த ஒருவர் அவரோட கைகுலுக்க மறுத்து, அழ ஆரம்பித்தார். நீங்கள் கை குலுக்க வேண்டும் என நான் சொன்னேன். அதற்கு அவர் தலைவரிடம் கைகுலுக்க மனம் வரவில்லை. தலைவர் நடமாடுவதைப் பார்த்தால் நான் கடந்த காலத்துக்கு சென்று வந்தது போல உள்ளது என்றார்.

கதாபாத்திரங்களில் பொருந்திப் போகும் நடிகர்களை நாங்கள் அவ்வளவு தூரம் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளோம்.

உங்கள் மனத்திரையில் ஓடிய திலீபனின் வாழ்க்கையும், திரையில் வரவிருக்கும் திலீபனின் வாழ்க்கைக்கும் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? எண்ணத்தை அப்படியே சினிமாவாக்க முடிந்ததா?

முதன்மை பாத்திரம் உயிரோடு இல்லை என்பதால், கடந்த கால நிகழ்வுகளைக் கண்ணால் கண்டவர்கள், சரித்திர ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே கதை எழுதினேன். ஆனால் படம் எடுத்தபோது சிறு மன அழுத்தத்தை உணர்ந்தேன். திலீபன் தோன்றும் அனைத்து ஒளி கோப்புகளையும் நான் பார்த்துள்ளேன். நடந்ததை சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதால், திலீபனாக நடிக்கும் நந்தா, யாழ்ப்பாணம் சென்று ஆணிவேர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று, திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஒளி கோப்புகளை பார்த்துள்ளார். .

கதாபாத்திரத்துக்குத் தேவையான ஒப்பனை செய்து முடித்தவுடன் அனைவரும் அச்சு அசலாக போராளிகளைப் போலவே நடந்து கொண்டனர். ஏனென்றால் அனைவரும் அதற்குத் தேவையான மெனக்கெடலை செய்திருந்தனர். கிட்டுவாக நடிக்கும் வினோத் சாகர், யோகியாக நடிக்கும் எத்திராஜ், பிரபாகரனாக நடிக்கும் ஸ்ரீதர் சுப்பிரமணியன், மில்லராக நடிக்கும் காதல் பரத், ஜீவா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அகில் என அனைவரும் அவரவர் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

கிஷோர் உங்களுக்கு மிகப் பெரிய பலம். அவரது பங்களிப்பும், அவரது இழப்பும் குறித்து….

நான் 1998-ல் கதிர் அவர்களிடம் காதலர் தினத்தில் பணிபுரிந்த சமயத்திலிருந்து கிஷோர் எனக்குப் பரிச்சயம். அப்போது அவர் விடி விஜயனிடம் உதவியாளராக இருந்தார். வேகமாகக் கற்றுக் கொள்ளக் கூடியவர். நாங்கள் அப்போது நிறைய பேசுவோம். மீண்டும் பரதேசி சமயத்தில் நாங்கள் சந்தித்த போது நெருங்கிய நண்பர்களானோம்.

அவர் பலரிடம் திலீபன் படத்தைப் பற்றி மிக உயர்வாகப் பேசியுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் படத்தொகுப்பு செய்த விதம் அற்புதமாக இருந்தது. ஆம் அது எனக்கு பெரிய இழப்பு தான். அவருக்கு நான் திலீபன் கதையை சொன்ன அடுத்த நாள் என் அலுவலகத்துக்கு வந்தார். சார், இது நிஜமாக நடந்த கதையா? அப்படியென்றால் நான் ஏன் இன்னும் இவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்று மனவருத்ததுடன் பேசினார். .

தொடர்ந்து திலீபனைப் பற்றி நாங்கள் பேசினோம். திலீபன் சம்பந்தப்பட்ட ஒளிக் கோப்புகள் அனைத்தையும் அவருக்குக் காட்டினேன். படம் எப்படி வரவேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசினோம். தொடர்ந்து, படத்தொகுப்பு எனது ஸ்டூடியோவில் நடக்கும் எனவே நீங்கள் எனக்கோ, ஸ்டூடியோவுக்கு பணம் தரவேண்டாம். எனது உதவியாளர்களுக்கு மட்டும் தந்தால் போதும் என்று சொல்லிவிட்டார். தீலிபன் போன்ற ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளாததே எனக்கு வருத்தமாக உள்ளது. அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றார். பலரிடம் இல்லாத மேன்மையான இதயம் அவரிடம் இருந்தது. கண்டிப்பாக எனக்கு இது தனிப்பட்ட முறையிலும் இழப்புதான். என் நலவிரும்பி அவர். நல்ல மனிதர். கடவுள் சுயநலமானவர். எப்போதும் நல்லவர்களையே தன் பக்கம் வைத்துக் கொள்ள விரும்புவார்.

மிக முக்கியமான அரசியல் வரலாற்றுப் படத்தை உருவாக்கியிருக்கும் நீங்கள்… இந்தப் படம் மீது உங்களுக்கு இப்போது இருக்கும் வணிக ரீதியிலான எதிர்ப்பார்ப்பும், கருத்தியல் ரீதியில் எந்த மாதிரியான தாக்கத்தைத் தரும் என்ற கணிப்பும் கொண்டிருக்கிறீர்கள்?

சினிமா பார்க்கும், புலம் பெயர்ந்தவர்களை நம் முதலில் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஈழ போராட்டத்தைப் பற்றி எந்த திரைப்படமும் எடுக்கப்படவில்லை. தமிழில் கமர்சியல் படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுவது கடல் தாண்டி வாழ்பவர்களையும் மனதில் வைத்துதான். இதற்கு முன் இந்த விவகாரத்தைப் பேசிய படங்கள் சில மோசமாக எடுக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்ஜெட் காரணமாக தரமின்றி எடுக்கப்பட்டிருந்தன. எனவே வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தன.

திலீபன் மக்களின் நாயகன். காந்தியும் பகத் சிங்கும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படியான போராளி திலீபன். தமிழர்களுக்காகப் போராடியவர். அவரது கதையில் நாயகனுக்கான அம்சம் நிறைய இருப்பதால் முன்னணி நாயகர்கள் சிலரே கூட இதில் நடித்திருக்கலாம். இது வரலாற்றுப் படம் என்பதாலும், உண்மைக் கதை என்பதாலும், அவரைப் போலவே இருக்கும் ஒருவரை நடிக்க வைப்பதே சரியாக இருக்கும்.

ஓமர் முக்தர், சே, மண்டேலா, காந்தி, மார்டின் லூதர் கிங் போன்றவர்களைப் பற்றிய படம் எடுத்த மேற்கத்திய சினிமாவுக்கு திலீபன் நம் பக்கத்திலிருந்து சிறந்த பதிலாக இருக்கும்.

திலீபனுக்காக இலங்கைத் தமிழர்களுடன் நிச்சயம் அதிக தொடர்பில் இருந்திருப்பீர்கள். இப்போது அவர்களின் நிலை என்ன? மன நிலை எப்படி இருக்கிறது?

இதற்கு முன்பு நான் அளித்த பேட்டியைப் பார்த்தவுடன் பலர் என்னை ஃபோனில் அழைத்தும், ஃபேஸ்புக்கிலும் தொடர்பு கொண்டனர். பலர் அழுதனர், சிலர் என்னை அழ வைத்தனர். அப்படி ஒரு பெண்மணி ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை அனுப்பி என் தொலைப்பேசி எண்ணை கேட்டிருந்தார். 1987-ஆம் ஆண்டு போரில் இறந்த போராளி ஒருவரின் தாய் அவர்.

தான் திலீபனுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதாகச் சொன்னார். பின்னிரவு என்பதால் என்னிடம் பேசலாமா என அனுமதி கேட்ட்டார். நானே அழைக்கிறேன் என அவரது எண்ணை வாங்கி அழைத்தேன். அவர் பேசுகையில், நான் ஒரு மாவீரனின் தாய். நீயும் என் மகனைப் போலதான். நான் உன்னை மறக்க மாட்டேன் என அவர் அழுதார்.

“நன்றி தம்பி … உங்கட கால தொட்டு கும்பிடனும் போல இருக்குனு” என்றார். நானும் அவரோடு அழ ஆரம்பித்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. அனைத்து மாவீரர்களும் தீலிபனைப் போலத்தான் என்றேன். இலங்கையில் உள்ள தமிழர்கள், அவர்களுக்குத் தேவையானதைப் பெறுவார்கள் என பல ஈழத் தமிழர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தனி ஈழம் வரும் என நம்புகின்றனர். அவர்கள் போராட்டத்தை விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். போராடும் முறை மாறிவிட்டது. ஆனால் அவர்கள் நோக்கம் மாறவில்லை.

தமிழில் எத்தனையோ மூத்த இயக்குநர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள்… அவர்களில் பலர் இலங்கைத் தமிழர் போராட்ட வாழ்க்கைக் குறித்து சமகால சினிமாவில் துல்லியமாகப் பதிவு செய்யவில்லை என்ற கோபம் உங்களிடம் இருக்கிறதா?

சிலவற்றுக்கு அதிகமான நேரமும் ஆற்றலும் தேவைப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் இயக்குநர்கள் அவர்களது வேலைகளில் ஆழ்ந்துள்ளனர். சரித்திரத்தை அடிப்படையாக வைத்து படம் எடுக்கும்போதும் கமெர்சியல் காரணங்களுக்காக எதையும் சமரசம் செய்து கொள்ள முடியாது. சினிமா ஆரம்பத்திலிருந்து எவரும் ஈழத் தமிழர்களின் கஷ்டத்தைப் பற்றி படம் எடுக்க முயற்சித்ததில்லை. ஒருவேளை எவரேனும் எடுத்திருந்தால் எனக்கு அந்த எண்ணம் வந்திருக்காது. இந்த எண்ணம் என்னை நீண்ட நாட்களாக ஆட்டிப் படைத்தது, அவர்களை தேவையில்லாமல் சிக்கலில் சிக்க வைக்கும் ஒரு கதையை எடுக்க அவர்கள் தயங்கியுள்ளனர். அல்லது அவர்கள் அறியாமை அவர்களை தடுத்துள்ளது.

இயக்குநர்கள் தங்களது சந்ததி, கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வியல், கொள்கைகள், நாயகர்கள் என பலவற்றையும் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தென் தமிழகத்தின் வாழ்வியலை ஒட்டி இருக்கும் படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். அப்படியான கதைகளை இயக்கும் எண்ணமும் எனக்கு உள்ளது. இனம் சார்ந்த கதைகளுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது என நடிகர் கமல்ஹாசன் ஒரு முறை சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட இடங்களைப் பற்றி நாம் கதைகள் சொல்ல வேண்டும்.

அப்படி தீண்டத்தகாத கதையாக தமிழ் இயக்குநர்கள் கருதிய கதைதான் தீலிபனுடையது. அவர்கள் தீண்டத்தகாது என நினைத்த இடத்திலிருந்து எனக்கு லட்சக்கணக்கான கதைகள் கிடைத்தன. அனைவருமே அங்கு நாயகர்கள் தான். ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து நின்றனர். அவ்வளவு அறிவு முதிர்ந்த குழந்தைகளை நீங்கள் எங்கும் பார்த்திருக்க முடியாது. அவர்களது வலிகளை மீறி அவர்களது தாய் மண்ணின் பால் அவர்களுக்கு அன்பு இருந்தது. இதை விட ஒரு உருக்கமான படத்தை எடுக்க என்ன வேண்டும்?

உங்களது இந்த திலீபன் முயற்சி முழு வெற்றி என்று உணரும் தருணம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்ததால் பலவற்றை இழந்தேன். தமிழனாக பிறந்ததற்கு என் கடமையைச் செய்தேன் என்று நினைப்பேன்.

செய்தி மூலம்: தமிழ் இந்து நாளிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here