பிரான்சில் புதிதாக 5000 வைரஸ் தொற்றுக்கள்! செப்ரெம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா?

0
789

நாடளாவிய ரீதியில் புதிய கல்வி ஆண்டின் தொடக்கம் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படமாட்டாது எனத் தெரிவித்திருக்கும் பிரான்ஸின் கல்வி அமைச்சர், நிலைமைகளைப் பொறுத்து உள்ளூர் மட்டத்தில் மாற்றங்கள் வரலாம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸில் புதிய கல்வி ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாக உள்ளது.லட்சக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந் நிலையில் வைரஸ் தொற்று நிலைவரம் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. ஒரே நாளில் மட்டும் சுமார் 5ஆயிரம் புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருவதால் குறித்த தினத்தில் பாடசாலைகளைத் திறப்பதை சற்றுத் தள்ளி வைக்கவேண்டும் என்ற கருத்து சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து கிளம்பி உள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்வி என்பன சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டியவை என்று குறிப்பிட்டிருக்கும் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer, பாடசாலைகளில் தேவையான அனைத்து சுகாதார விதிகளையும் கடைப்பிடிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

11வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் மாஸ்க் அணிந்து கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது கட்டாயம். பிள்ளைகளுக்குரிய மாஸ்க்குகளை பெற்றோர்களே வழங்க வேண்டும். தேவை ஏற்பட்டால் மாணவர்களுக்கு பள்ளிகளிலும் மாஸ்க் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் சுகாதார நிலைவர அறிக்கைப்படி, புதிதாக 4ஆயிரத்து 771 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் குழுக்களாக 35 புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி, ஸ்பெயின்,ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

20-08-2020
வியாழக்கிழமை.

குமாரதாஸன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here