ஊடகவியலாளர் வேல்முருகனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்: வ.கௌதமன்

0
796

“ஊடகவியலாளர் திரு.வேல்முருகனுக்கு கண்ணீர் அஞ்சலி. செவிலியரான அவரின் மனைவிக்கு தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.”

வ.கௌதமன் கோரிக்கை.

கொரானாவின் கோரப் பிடியில் கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் மடிந்து கொண்டிருக்கிற சூழலிலும் ஊருக்குள் நடப்பதை உலகிற்கு சொல்லும் மகத்தான பணியை செய்து வருபவர்கள் ஊடகவியலாளர்கள்.
நவீன உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக ஊடகத்துறையும், ஊடகவியலாளர்களும் போற்றப்படுகிறார்கள்.இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றின் வீரியத்தை வீதியெங்கும் எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த அன்பிற்குரிய சகோதரர் ஊடக ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகனின் இறப்பு மாபெரும் மன வேதனையை ஏற்படுத்திவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் தமிழகத்தில் முதல் பலி இவர் என்பதால் துறை சார்ந்த அத்தனை பேரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இறப்போம் எனத் தெரிந்தும் போருக்குச் செல்வதும், இருப்போமா இல்லையா என தெரியாமல் செய்தி சேகரிக்கச் செல்வதும் இரண்டுமே ஒன்றுதான். இதை ஆருடத்தில் சொல்லவில்லை அனுபவத்தில் சொல்லுகிறேன். கத்தி மேல் நிற்பதைப் போன்று நாங்கள் நடத்திய கத்திப்பாரா போராட்டமாக இருக்கட்டும், இரத்தம் சிந்திய போர்க்களமான அவனியாபுரத்தின் ஜல்லிக்கட்டு போராட்டமாக இருக்கட்டும், செம்மரம் வெட்ட சென்றதாகச் சொல்லி ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட இருபது தமிழர்களுக்காக நீதி கேட்ட திருவண்ணாமலை படைவீடு யுத்த களமாக இருக்கட்டும், விவசாயிகளுக்காக உரிமை கேட்டு நடத்திய ஐபிஎல் போர்க்களமாக இருக்கட்டும், இன்னும் எண்ணற்ற போராட்டங்களில் எங்களுடன் சரி நிகராக நின்று எங்களுக்கு விழுந்த அடிகளை சில நேரம் தங்களின் மீதும் தாங்கி உண்மையை உலகிற்கு உரக்க சொன்னவர்கள் ஊடகவியலாளர்கள். அந்த நன்றியுணர்வினை என்றும் நினைவில் தாங்கி நிற்கும் எங்களுக்கு, இன்று அதில் ஒருவர் உயிர் பலியாகி இருப்பது ஆற்ற முடியா பெரும் துயரத்தோடு உள்ளத்தை உலுக்கியெடுக்கிறது.

ஊடகத்தில் எது செய்தியாக வருகிறதோ அதுதான் உலகத்தில் பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட ஆகச் சிறந்த பணியை செய்து வரும் ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரின் இறப்பிற்கும் ஐம்பது இலட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டுமென தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறேன்.மேலும் ஊடகவியலாளர் திரு.வேல்முருகன் அவர்களின் மனைவி திருமதி. சண்முகசுந்தரியின் ஒப்பந்த செவிலியர் பணியை நிரந்தரமாக்க வேண்டுமெனவும் தமிழ் பேரரசு கட்சி சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். ஊடகவியலாளர் திரு.வேல்முகனை இழந்து தவிக்கும் அவரின் உற்றார் உறவினர் உட்பட சக பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு இனி தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோடு செய்தி சேகரிக்க செல்லுமாறு ஊடக தோழமைகள் அனைவரையும் ஒரு சகோதரனாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
27.06.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here