ஈழத்தமிழ் மக்கள் நாம் எந்தநிலையிலும் உறுதியிலும் குலைந்து போகக் கூடாது! (சிறப்பு நேர்காணல்)

0
726

பிரான்சில் இன்று நிலவும் உள்ளிருப்புக் காலவேளையில் மக்களின் நிலைமை குறித்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் எரிமலை இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் எரிமலை மின்னிதழாக இணைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ளிருப்புக்காலம் ஒரு மாதங்களைத் தாண்டிய நிலையில் தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?
இதுவொரு முதல் அனுபவம், தாயகத்தில் போராட்டச் சூழ்நிலையால் போடப்பட்ட ஊரடங்குச்சட்ட நேரமே எம்மவர்கள் ஏதேவொரு வழியில் வெளியில் சென்று வந்த சம்பவங்கள் உண்டு. ஆனால் அவ்வாறனதல்ல இது. கண்ணுக்குத் தெரியாததொரு வைரசின் நிலைப்பாடு. இன்று அது என்னில் உள்ளதா அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி நண்பர்கள் என்று யாரைப்பார்த்தாலும் பயப்பிடுகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்ற நிலைமையே உள்ளது. இதில் யார் எவர் என்று பார்க்கமுடியாது. உள்ளிருப்புச் சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும். கட்டுப்பட வேண்டும். இதனால் எம்மவர்கள் நிறையவே பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் புதிய அநுபவம், சிந்தனைகள், தேடல்கள், எம்மவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தவிர்க்க முடியாத எமது யந்திரமயமான வாழ்வில் சிக்குண்டு வாழ்ந்;த நாம் இன்று குடும்பம்; பிள்ளைகள், பெற்றோர்களுடன், நண்பர்களுடன் வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட ரீதியில் வாழ முயற்சிக்க வேண்டும். இதனால் மனவுழைச்சலையோ, பயப்படுவதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும். வாழ்க்கை என்னும் பாடத்தை நிறையவே படிக்கவொரு சந்தர்ப்பம். இதுவோர் தனியொரு குமுகாயத்தின் பிரச்சனையல்ல. இனமோ, நிறமோ எனப்பராது மனிதகுலத்திற்கு மட்டும் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினை யாகும். இது ஏனைய உயிர்வாழ்வனக்கு ஏற்பட்டிருந்தால் நிலைமை நினைத்துப்பார்க்க முடியாத அளவு வேறுமாதிரிப்போயிருக்கும்.
தாயகத்தில் ஏற்பட்ட இனவழிப்பிலிருந்து உயிர்தப்பி புலம் பெயர்ந்ததுடன் அனைத்து நாடுகளிலும் எமது இனமானது வாழ்ந்தே வருகின்றது. இன்று இந்த வைரசு கொவாட் 19 தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பற்றிக்கொண்டுதான் இருக்கின்றது. நாம் வாழும் பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை பலர் வதிவிட உரிமை, குடியுரிமை பெற்று வாழ்பவர்கள், அவர்கள் பணி அதன்மூலம் அவர்களின் சேமிப்பு இன்றைய நிலையில் அவர்களுக்கு கைகொடுக்கின்றது. ஆனால், வாழ்விட நாடுகளில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், பணியில்லாதவர்கள், அரசு உதவியின்றி தவிப்பவர்கள் என்று பலரைப்பார்த்திருந்தோம். முடிந்தளவு அவர்களை உறுதிப்படுத்தி உதவிகளும் புரிந்திருந்தோம். அதேநேரம் தமிழ் மக்கள் மனிதநேயம் கொண்டவர்கள் என்பதை இக்காலத்தில் பார்த்திருந்தோம். தம்மிடம் உள்ளதை அயலில் இல்லாது இருப்பவர்களுக்கு வழங்கிய மனிதநேயத்தையும் பார்த்தோம். காலமும் ஒருநாள், நிலைமையும் ஒருநாள் மாறும். அதில் இந்த மனிதம் நிச்சயம் பதிவாகும்.

இன்று புலம்பெயர் நாடுகளில் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மரணமான தமிழர்கள் பலரின் மரணங்கள் மறைக்கப்பட்டு சாதாரண மரணங்களாகவே வெளியில் சொல்லப்படுகின்றன இது பற்றி?
வேதனைதான் இந்த கொவாட்19 என்பது உலக ஆராட்சியாளர்கள், வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுவோர் வைரசு வருத்தமே என்று. எமது தேசத்தில் இதே போலவே அம்மன் வருத்தம், கொப்புளிப்பான், சின்னமுத்து, அக்கி, கண்கட்டி, மூளைக்காய்ச்சல், செங்கண்மாரி, மங்கமாரி போன்றவை போன்று ஒன்றே. இவற்றிற்கெல்லாம் அன்று வைத்தியம் செய்தமை மிகவும் அருமையே. நாட்டு வைத்தியம், சூழ்நிலையை மாற்றமடையச்செய்து மூலிகைகள் கொண்டும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட உணவுகள் குடிநீர்களை பாவித்தே பலர் உயிர் தப்பியிருக்கின்றனர். அன்று முதல் இன்று வரை அங்கு ஆங்கில வைத்தியத்தை நாடிச்சென்றதே கிடையாது. முதலில் இது ஒரு எயிட்ஸ், தொழுநோய், புற்றுநோய், கசம் ஆகிய நோய்களைப் போன்றதல்ல. இந்த நோய்க்கு சரியான மருந்தின்மையாலும், நோயாளரின் உடல் தாக்கம் நோய்எதிர்ப்பு சக்தி அக்கறையின்மை போன்றவற்றின் காரணமாகவே பலர் 1,50,000 இலட்சம் பேர் இறந்திருக்கின்றனர். ஆனால், இந்த வைரசின் தாக்குதலுக்கு பல லட்சம் மக்கள் உள்ளாகியுள்ளனர். இதில் நானும் ஒருவன்தான். இந்த வைரசுத் தாக்கு தாக்குப்பிடிக்கும் நோய் ;எதிர்ப்புச் சக்தி காணாது போகும் போதுதான் தொண்டை வழியாக இதயத்தைத் தாக்குகின்றது. கோமா நிலைக்கு கொண்டு செல்கின்றது. அதன்பின்தான் முடிவு செய்யப்படுகின்றது. தொண்டைவரை செல்லாமல் எம்மால் தடுக்க முடியும். அறிவுரைகளையும், அறிவித்தல்களையும் உதாசீனம் செய்யக்கூடாது.(இந்த உள்ளிருப்பு சட்டம் 24 மணிநேரத்தில் வரப்போகின்றது என்ற நம்பிக்கையான இடத்தில் செய்தி கிடைத்ததை யிட்டு நண்பர்களுக்கு அதைத் தெரியப்படுத்திய போது அதனை நம்பிச் செயலில் செயற்பட்டவர்களும், அது சாத்தியமில்லை எவ்வாறு முடியும் என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தவர்கள் அடுத்தநாள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நீண்டவரிசையில் காத்திருந்தனர். அசட்டையும் அசமந்தப்போக்கும் தான் ஆயிரமாயிரம் உயிர்கள் பலியாவதற்கு காரணமாகின. இதனால் ஏற்படுகின்ற இறப்பை ஒரு விபத்து மரணமாகவே பார்க்க வேண்டும். ஆனால், எமது மக்கள் கொரோனாவால் இறந்தவர்கள் என்று சொல்வதையும், ஏதேவொரு காரணத்தாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால், இக்காலப்பகுதியில் யார் ஒருவர் நோயுற்றோ, மாரடைப்பால் அன்றி வேறு ஒரு காரணத்தால் இறந்தாலும் உடனடியாக கொவாட்19 இதனைத்தான் சொல்வார்கள். சர்வதேசமெங்கும் பல உன்னதமானவர்கள் எல்லாம் இறந்திருக்கின்றார்கள். இத்தாலி நாட்டில் இதுவரை 110 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இது அவலமான அவமானச்சாவு அல்ல. இது பேரிடர்ச் சாவு. அதனையே பிரான்சு நாட்டின் தலைவர் கூறியிருந்தார், கண்ணுக்குத் தெரியாததொன்றுடன் யுத்தம் புரிகின்றோம் என்று.

இன்று வதந்திகள், உறுதிப்படுத்தப்படாத குறுஞ்செய்திகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வேதனைகளை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு. வைத்தியர்களால் இது அந்தச் சாவு இல்லை என்றுவிட்டு சான்றிதழ் கொடுக்கும் போது இதன் காரணமாகவே இறந்தனர் என்பது குடும்பத்தினருக்கு ஒரு பயப் பீதியை ஏற்படுத்துகின்றது. சட்டபூர்மாக கொடுக்கும் சான்றிதழே எதையும் தீர்மானிக்கிறது. ஆனால், இன்று இவை அவசியமல்ல. இறந்தவருக்கு ஒரு இதயபூர்வமான வணக்கமே இன்று அவசியமாகிறது.

இன்றைய நிமையில் பிரான்சு வாழ் தமிழ் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால உதவிகள் பற்றிக்குறிப்பிடுங்கள்?
இரண்டு கால்களும் பாதிப்புற்று நடந்தவன் தனக்கு எதிரிலே இரண்டு கால்களும் இன்றி கைகளால் நடந்து போவதைப் பார்த்து பெருமூச்சு விடுவதுபோலத்தான் இதுவும். தாயகத்தில் ஒரு நேர உணவிற்காக அன்றாடம் கூலிவேலைகளை யும், கடற்றொழிலையும் செய்து வறுமைக்கோட்டிற் குள் வாழும் மக்கள்தான் அதிகம். ஓரளவு வசதிகொண்டவன் ஒருநேர உணவையாவது உண்ணுகின்றான். இதனைவிட ஏழைகள், நகரங்களை விட கிராமங்களில் அதிகம் வாழ்கின்றனர். இவர்களின் அன்றாடத் தேவையும், துன்பதுயரமும் வெளித்தெரியாதவைகள். இவர்களுக்கே அதிகம் உதவவேண்டும் என்பதை கவனத்திற்கொண்டு, தாயகத்தில் பல்வேறுதரப்பால் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் தமக்கேற்படவுள்ள ஆபத்துக்களையும், நோயையும் பொருட்படுத்தாது சட்ட அனுமதியைப் பெற்று சுயகட்டுப்பாட்டைப் பேணி எமது மக்களுக்கான மனிதநேயப்பணியை ஆற்றிவருகின்றவர்களே இன்று கண்ணுக்குக் கண்கண்ட தெய்வங்களாக தெரிகின்றனர். அனாலும் இந்த உதவிகள் யாவும் ஒருமுகப்படுத்தப்;படவேண்டும். அதனால் எல்லோருமே பயனடையக் கூடியதாக இருக்கும். உண்மையில் இது செய்யப்பட வேண்டியவர்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளி லும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படும் கட்சிகளுக்கே அவர்களின் கரங்களை வலுப்படுத்தத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புகின்றனர். 2009 இற்குப் பின்பாவது தமிழ்மக்களின் நலனுக்காக உண்மையுடன் செயற்படுவார்கள் என்று நம்பி பாராளுமன்றம் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் இதுவரை எந்தப் பேரிடர் உதவியைச் செய்யவில்லை. மாறாக சிங்கள தேசத்தின் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாக வீட்டுக்குள் இருந்து கடைப்பிடிக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதுவா இவர்களது மக்கள் சேவை மகேசன் சேவை என்பதுதான் எல்லோ ருடைய பெரும் வேதனை. ஆனாலும் (ஈருருளிக்காரர்கள்) சைக்கிளில் சென்று மக்களுக்கு முடிந்தவரை உதவிவருகின்றனர். இதைவிட தனிப்பட்ட ரீதியில் கட்சிச் சாயங்கள் இன்றி இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உதவிவரும் இதேவேளை, விழிப்புணர்வு எனக்கூறி தமது படங்களை அடித்தும் அரசியல் கத்துக்குட்டிகள் செய்யும் அலப்பறைகள் தான் அதிகம். அதன்பால் ஏற்பட்டுள்ள நியாயமான கோபத்தையுமே இன்று புலத்திலும் களத்திலும் காணக்கூடியதாகவுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழர் அமைப்புக்களாலும், தனிப்பட்ட ஊர் அமைப்புகள், வணக்கத் தலங்கள், விளையாட்டுக் கழகங்கள், கல்விசார் அமைப்புகள் முடிந்தளவு உதவி வருகின்றனர். ஆனால, தாயக மக்களும் தொடர்ந்து இந்த உதவியும் கிடைக்கும் என்று இல்லாமல் தமது குடும்பத்திற்கு தேவையான சிறிய வீட்டுத் தோட்டங்களைச் செய்யவேண்டும் அதனை முன்னெடுக்கும் முன்னெடுப்பாளர்களிடம் உதவிகளை பெற்று துரிதகதியில் பலன் பெற வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.
நல்ல உணவுகளையும் நோய்எதிர்ப்புச்சக்தி கொண்டவைகளையும் உண்ண வேண்டும்.
இதேபோல இங்கு பிரான்சில் பாரிசின் புறநகர் பகுதி என்று அழைக்கப்படும் இடத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் வதிவிட உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், அரச சலுகைகள் எதுவுமின்றி, வெளியில் செல்ல முடியாதவர்கள் பலர் வாழ்கின்றனர். பணமில்லை, உணவு பொருட்களை முற்கூட்டியே பெற்று சேமிக்காதவர்கள் பற்றி அறிந்து தாய்க் கட்டமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள தமிழ்ச்சங்கங்களுக்கும் பொறுப்பாக இருக்கும் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பினால் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மற்றும் மருத்துவ, அரசு அறிவுறுத்தல்கள், அலுவலக முற்கூட்டிய அனுமதிகள் மாற்றம், எனப் பல்வேறு உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதுவரை 150 வரையி லான குடும்பங்களுக்கு இங்கு மனிதநேய உதவி வழங்கப்பட்டுள்ளது. உள்ளிருப்பு மே 11 வரை நீடிக்கப்பட்டதால் உதவியை எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கு இருப்பவர்கள் தான் உதவிக்கரம் நீட்ட வேண்டும். தாயகத்தில் எவ்வாறு மனிதநேயப் பணியில் மக்கள் செயற்பாட்டார்களோ, அதேபோல சங்கத்தினரும் இங்கு செயற்பட்டனர். அதைவிட தமது சங்கம் உடாக தாயகத்திற்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை அன்பர்கள், ஆதரவாளர்களிடம் பெற்று வழங்கியும் வருகின்றனர்.

உள்ளிருப்புக் காலத்தை சாதகமாகப் பயன்படுத்தி தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வழிப்பறிகள்,கொள்ளைகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதுகுறித்து எமது மக்களுக்கான விழிப்புணர்வு..?
உண்மையும் கூட, வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் பலர் வீடுகளுக்கு செல்லாமல் வைத்தியசாலைகளில் தங்கியே தமது உன்னதமான பணியைச் செய்து பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகின்றார்கள். இவர்களின் வாகனங்கள் பலநாட்கள் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டு நிற்கையில் கார்கள் உடைக்கப்படுதலும், திருட்டுப்போதல், குறிப்பிட்ட இனம்மீதான தாக்குதல், ஏன் இரவு பகல் குடும்பம் எனப்பாராது நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பில் காவல் கடமையில் ஈடுபடும் காவல்துறையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் செய்திகள் தெரிவித்துள்ளன. அதுவும் பெண்காவல் துறைமீது என்பதும் வேதனைக்குரியது. மனிதனால் பூமிக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட ஏக்கமேதான் இன்று கண்ணுக்குத் தெரியாததொன்றால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கொவாட் 19 இன்னும் எத்தனைவருமோ எமது உடலை மட்டுமல்ல மன தையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

நிறைவாக கொரோனாவின் கொடுமை எப்போது முடிவுக்குவரும் என்று காத்திருக்கும் எம் உறவுகளுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இந்தப் பூமிப்பந்தில் மனிதன் படைத்த எத்த னையோ சாதனைகள், நவீன விஞ்ஞானம், உயர் தொழில்நுட்பம், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் வல்லமைகள், பூமியைக்கடந்து ஏனைய கிரகங்களை நோக்கிச் செல்லும் விஞ்ஞான உலகத்தில் கண்ணுக்குத் தெரியாததொரு வைரசுக் கிருமி எல்லா வல்லரசுகளையும் அடிபணிய வைத்துள்ளது. வெகுவிரைவில் பழைய சுமுகமான நிலை வரவேண்டுமாயின் விரைவாக உலக விஞ்ஞானிகள் இந்நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியைக்கண்டு பிடித்தாலும் நோய்தீர்க்கும் மருந்து அவசியம். அது பரவலாக மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டாலே நல்லதொரு நிலைப்பாட்டுக்கு உலக மக்கள் வருவார்கள் என்பது எமது கணிப்பு. இல்லையேல் ஒரு மனிதரை ஒருத்தர் பார்க்கும்போது ஏன் அது குடும்ப உறவிலும் எம்மை அறியாமலே ஒரு தப்பான கண்ணோட்டம், பார்வை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும் வைத்தியர், உளவியல், விளை யாட்டு, களியாட்டம், கல்வி போன்றவற்றின் மூலம் பழைய நிலைக்கு விரைவில் மக்களைக்கொண்டு வர அரசு முழு முயற்சி எடுக்கும். அதற்கு தமிழர்கள் நாமும் பெரும் ஒத்துழைப்பும் பங்கும் ஆற்ற வேண்டும்.
இந்தக் காலத்தில் 40 வருடங்கள் பின்னோக்கி ஒருமுறை சென்று வருவோம். எமது இனத்தின் சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களை உயிர்களை நாம் விலையாகக் கொடுத்துள்ளோம். 1982 – 2009 வரை எமது மண்ணில் இனவிடுதலைக்கான போராட்டத்திலும், இயற்கையின் சீற்றத்துக்கும் பெருவாரியிலான (ஆழிப்பேரலை) மக்கள் இறந்திருக்கின்றார்கள். ஆனால, என்றைக்கும் இதுபோன்ற வைரசு தாக்கத்தினால் இறந்தவர்கள் என்பது அரிதே. அதற்குக் காரணமும் உண்டு. பல்லாயிரம் வருடங்கள் கொண்ட மருத்துவ உணவுமுறைகள். கிராமங்கள் முதல் நகரங்கள் வரையான வைரசுகளை அழிப்பதற்கான இயற்கையின் செயற்பாடுகள். பின்னைய நாட்களில் சிங்கள தேசத்தால் திட்டமிட்டு பொருளாதாரத் தடையை தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொண்டபோது தமிழீழ அரசானது எடுத்திருந்த நடவடிக்கைகள் பொருண்மிய செயற் பாடுகள், பலலட்சம் மக்களை பிணிகளிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது. ஓர் உயிர் என்பது உன்னதமானது. தன் இழப்பு எந்த வடிவில் வந்தாலும் வேதனையே தான். தமிழீழ தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று இந்த உலகம் மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை. மனித தர்மம், உரிமை , அறம் என்பவற்றிலும் பார்க்க பொருளாதார வர்த்தக நலன்களே இன்று உலக ஒழுங்கை நிர்ணயிக்கின்றது என்று. இதுதான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த வாழ்வுக்குள் சிக்குண்டுள்ள தமிழ் மக்களாகிய நாம் கடந்து வந்த காலங்களை மீட்டுப்பார்த்து இந்த சில மாதங்களாக ஏற்பட்டிருக்கும் பயப்பீதியிலிருந்தும்;, மனக்குழப்பத்திலிருந்தும், மனவுழைச்சலில் இருந்தும் விடுபடவேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திரமாக குடும்பத்துடன் தற்போது இருக்கின்ற நாங்கள், பெற்றோருடன், பிள்கைளுடன் நேரமெடுத்து எமது ஆரோக்கிய மான சமையலற்கலைமுதல் அனைத்து கலைகளை யும் தெரியப்படுத்தல், சொல்லிக்கொடுத்தல் எமது இனத்தின் வரலாற்றையும், கலைகளையும், வீர விளையாட்டுக்களையும், வீரக்கதைகளையும் சொல்லிக்கொடுக்கலாம். தொலைக்காட்சியில் இணையங்களில் தமிழர் சரித்திரம் கொட்டிப்போய்க்கிடக்கின்றது. அதனை இன்னும் எத்தனைகாலம்தான் போட்டு வைப்பார்களோ தெரியாது இருக்கும் வரை அவற்றைப்பயன் படுத்துவோம். இது தனியே பெற்றோர்களுக்கும் இருக்கும் கடமையல்ல கற்றோர்க்கும், கல்வியாசிரி யர்கள், குமுகாய அக்கறை கொண்டவர்களுக்கும் இருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.
இன்று கவலை கொள்ளும் ஒரு விடயம், தமிழர் மத்தியில் புரையோடிப்போயுள்ளதொரு விடயம் தமது பிள்ளைகளை எதிர்காலத்தில் படிப்பிப்பது என்றால் வைத்தியராகவும், தொழில்நுட்பவியலாளராகவுமே முன்மொழிவது. பின்பு தான் பிள்ளையின் விருப்பத்தை கேட்பது. அதன்பிறகு நிலவரத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வது. அப்படித் தமது கனவை நனவாக்க பல துன்பங்களை அனுபவித்து வைத்தியருக்கு படிப்பித்த பெற்றோர்கள், இன்று வேதனையுடன் தமது பிள்ளைகளை நினைத்துக் கவலைப்படுவதைக் காண்கின்றோம். தினம் வைத்தியசாலைக்குச் சென்று, தமது பிள்ளைகள் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் வரையும், வீட்டுக்கு வந்தபின்பும் இருமினாலோ, தும்மினாலோ பெற்றோர் இதயம் உடைந்து அவர்களின் நிலையினை பார்த்து கண்ணீர்வீடுவதும் பல இடங்களில், பல நாடுகளில் நடைபெறுகின்றது. இதில் தாதிமார்கள் கூட அடங்குகின்றனர். ஆனால், வைத்தியக் குழந்தைகளோ, தாதியாகப் பணியாற்றுகின்றவர்களோ மிகத் தெளிவாகவே இருந்து பணியாற்றுகின்றனர். இது கடவுளுக்கு ஒப்பானதொரு பணி. அடுத்து இவர்கள் கல்வி கற்று பணியை ஆற்றும்போது எடுக்கின்ற பேரிடர் காலத்தில் நாட்டின் மக்களின் நலனுக்காக உழைப்பேன் உறுதிப்பிரமாணத்திற்கு அமைய பணியாற்றவேண்டும். இது நாட்டைக் காக்கின்ற இராணுவத்தினர் எடுப்பது போன்றதே. இதில் எமது தேசத்தின் வாரிசுகள் வைத்தியசாலைகளில், சிறுவர்கள் மனநலக்காப்பகங்களில், முதியோர் இல்லங்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து பணியை மேற்கொள்கின்றனர். இதுவானது நாம் உயிர்தப்பி அனைத்து நாடுகளுக்கு அடைக்கலமாக வந்தபோது ஆதரவளித்து அன்புடன் இன்றுவரை எம்மை மனிதநேயத்தோடு நடாத்தும் அரசுக்கும் மக்களுக்கும் எமது சந்ததி செய்யும் ஓரு நன்றிக்கடனாகவே பார்க்கின்றோம். இவர்களை இந்த நேரத்தில் வாழ்த்துவதில் பெருமைகொள்கின்றேன். இந்தப்பணியாளர்களை பிரான்சு மக்களோடு சேர்ந்து தினமும் 8.00 மணிக்குக் கைகளைத் தட்டி வாழ்த்தைத் தெரிவிப்பதோடு புதன்கிழமை தோறும் சுடர்ஏற்றி வணக்கமும் செலுத்தும் அதேவேளை இந்த உன்னத பணியில் ஈடுபடும் எமது தெரிந்த உறவுகளையும், பெற்றோர்களையும் தொலை பேசிமூலம் வாழ்த்தி உற்சாகப்படுத்தவேண்டும். அதுவும் முடியாத பட்சத்தில் இணையத் தளங்களில், முகப் புத்தகங்களில், ருவீட்டர் போன்றவற்றில் நம்பிக்கை தரும் உற்சாகம் தரும் வசனங்களை எழுதவேண்டும். எங்கெங்கு அவர்களைப் பாராட்ட முடியுமோ அதனைச் செய்ய வேண்டும். அண்மையில் பிரித்தானியப் பிரதமர் அவர்கள் இவ்வைரசுத் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதித்த போது பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ்க் குழந்தைகள் அவர் நலமுடன் மீண்டுவரவேண்டும் என்று பிரார்த்தனைகள் கடிதங்கள் எழுதி அனுப்பியிருந்தனர். அதனை பிரித்தானியாவின் பிரபல்யமான ஊடகம் நன்றி தெரிவித்ததுடன் அந்தக் கடிதங்களையும் தனது பத்திரிகையில் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த கொடிய நுண்கிருமி காரணமாக உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஈழத்தமிழ் மக்கள் நாம் எந்த உறுதியிலிருந்தும் குலைந்து போகக் கூடாது. இந்த நிலை நாம் அனுபவிக்காதவர்களுமல்ல. எல்லாமே எமது கைகளில்தான் உள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களையும், ஒழுங்கையும் மீறாது ஒத்துழைத்து அந்த நாட்டுக்கும், மக்களுக்கு உதவுகின்றவர்களாகவும் அதனூடக எமது மனிதநேயத்தையும், பயங்கரவாதம் பயங்கவாதிகளின் போராட்டம் என சொல்லிவந்த சிங்களத்தையும், துணைபோன சர்வதேசத்தையும் நியாயமானவர்களான எமது பக்கம் உதவிடச்செய்ய வைக்க வேண்டும். இதனையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு எமது தாயக விடுதலைக் கட்டமைப்புக்களால் மக்களின் விடுதலையை நோக்கி முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் இதுவரை இருந்ததை விட அதற்கு மேலாக பணியாற்றுவோம் என்று தமிழீழத் தாயவள் அன்னைபூபதியம்மா அவர்களின் 32 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் அனைத்து தமிழீழ மக்களும் நெஞ்சில் உறுதியெடுத்துக்கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here