கொரோனாவின் கோரத்துக்குப் பலியாகும் தமிழ் மக்களின் விபரம் திரட்டல்!

0
1798

உலகமெங்கும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்து வரும் எம் தமிழ் உறவுகளின் விபரங்களைத் திரட்டும் பணியில் பிரான்சு ஊடகமையம் இறங்கியுள்ளது. இது குறித்து ஊடகமையம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்பு உறவுகளே,

புலம்பெயர் தேசங்களில் கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்படும் மற்றும் இறக்கும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

சிறீலங்காப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரை கணக்கிடப்பட முடியாமல் போயுள்ளமைபோன்று, கொரோனா கொல்லுயிரியால் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையும் தெரியாமலே போய்விடக்கூடும்.

இந்தத் தவறைத் தவிர்ப்பதற்கு கொரோனா கொல்லுயிரியால் உயிரிழக்கும் தமிழர்களின் தரவை நாம் ஆவணப்படுத்தவேண்டும். இவற்றை ஆவணப்படுத்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் எமக்கென்று பொதுவான மருத்துவக் கட்டமைப்பொன்று இல்லை. இதனால் இது பற்றிய தரவுகளைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் வகையில், கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தரவுகளை நாங்கள் திரட்டி வருகின்றோம். நீங்கள் வசிக்கும் நாடுகளில் உங்களுக்குத் தெரிந்த எவராவது கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தால் அவரது முழுமையான விபரத்தைத் தந்து உதவினால் அவற்றை ஆவணப்படுத்த உதவியாக இருக்கும்.

உங்கள் தகவல்களை பின் வரும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் ஊடாக குறுந்தகவலை (SMS) எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புலம்பெயர் நாடுகளில் உயிரிழக்கும் தமது நாட்டு மக்களின் எண்ணிக்கையை சிறீலங்கா கணக்கெடுத்து வருகின்றது. ஏற்கனவே ஒன்பதிற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தமது நாட்டுக் குடிமக்கள் மூன்று பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சிறீலங்கா தகவல் வெளியிட்டுள்ளதையும் இங்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கவனத்தில் கொண்டு, இந்த ஆவணப்படுத்தலின் அவசியத்தைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
உங்கள் தகவல்களை அனுப்பவேண்டிய முகவரி

மின்னஞ்சல்: Centredemedia@gmail.com

தொலைபேசி (குறுந்தகவல் – SMS) : 00 33 781 808 116

whatsapp : 00 33 781 808 116
ஊடக மையம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here