ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு தின நிகழ்வு கடந்த(19.10.2019) பிற்பகல் 3.மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் அமைக்கப்பட்டுவரும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவு தூபியின் அருகில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன் நிகழ்வில்
ஈழ தேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவாக சர்வதேச நாடுகள் உட்பட வடகிழக்கு பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் சர்வதேச ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு தினமானது கடந்த 2000 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் நினைவு தினமான ஒக்டோபர் 19 ஐ ஈழத்து ஊடகவியலாளர்கள் பிரகடனப்படுத்தி நினைவுகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்த நிகழ்வை நடாத்தியிருந்தது.
இதில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூரப்பட்டதுடன் இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஈழநாதம், BBC சன்டேசியா, ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.