எழுவரின் விடுதலை குறித்த ஆளுநரின் போக்கு: ஐயா பழநெடுமாறன் கண்டனம்!

0
776

ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு 25ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடிவரும் 7பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஓராண்டுக் காலத்திற்கு மேலாகியும், இன்னமும் ஆளுநர் அந்தப் பிரச்சனையில் முடிவு எடுக்காமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்கிடையில், பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்குக் கருணைக் காட்டவேண்டும் என்று அப்போதைய ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கருணை மனுவை ஆளுநர் ஏற்க மறுத்து ஆணைப் பிறப்பித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் நால்வர் சார்பில் நான் தொடுத்த வழக்கில், அப்போதை மூத்த வழக்கறிஞரும், பிற்காலத்தில் நீதியரசராக இருந்தவருமான கே. சந்துரு அவர்கள் வாதாடினார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு உயர்நீதிமன்றம் அவ்வாறு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அமைச்சரவையின் பரிந்துரையின்படியே ஆளுநர் செயற்படவேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை 25.11.1999 அன்று அளித்தது. அதற்குப் பிறகு அனைத்து மாநில அமைச்சரவைகளும் தண்டனை குறைப்பு விசயமாக பரிந்துரை செய்தவற்றை ஆளுநர்கள் ஏற்றிருக்கின்றனர். அதைபோல, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்றிருக்கிறார். இதற்கு எதிராக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ செயல்பட முடியாது .

எனவே, இதைத் தவிர்ப்பதற்காக ஆளுநர் காலம் கடத்துகிறார். ஆளுநரின் இந்தப் போக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் போக்காகும்.

திட்டமிட்டே ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here